Makara Jyothi 2024: சபரிமலையில் இன்று மகர ஜோதி பெருவிழா!-சுவாமி ஐயப்பனின் சிறப்புகள்
சபரிமலையில் உள்ள சாஸ்தா, ஐயப்ப சுவாமி, நான்கு யுகங்களுக்கு, அதிபதி எனக் கூறுவர். ஆதி சாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்தாக புராணங்கள் கூறுகிறது.
சென்ற மாதம் டிசம்பர் 27ல், மண்டல பூஜையுடன், சபரி மலையில், மண்டல காலம் முடிந்து, இரவு நடை அடைக்கப்பட்டது. 30-ல் மகர விளக்கு கால பூஜைக்காக நடை திறந்து, இரவு 11 க்கு அடைக்கப் பட்டது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, நடை திறந்து,மகர விளக்கு காலத்திற்கான நெய் அபிஷேகம் துவங்கி, வரும் ஜனவரி 15ம் தேதி, புகழ் பெற்ற மகரஜோதி பெருவிழா நடக்கிறது.பின் 21ம் தேதி காலை நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலையில் உள்ள சாஸ்தா, ஐயப்ப சுவாமி, நான்கு யுகங்களுக்கு, அதிபதி எனக் கூறுவர். ஆதி சாஸ்தா எட்டு அவதாரங்கள் எடுத்தாக புராணங்கள் கூறுகிறது. அதில் ஒன்று "கல்யாண வரத சாஸ்தா". இவர் பிரம்ம தேவனின் புதல்விகளான, பூரணை, புஷ்கலை ஆகிய இருவரையும் மணம் செய்துகொண்டார். காஞ்சி ஸ்ரீ காமாட்சி கோவிலில், காமக்கோட்டத்தைக் காக்கும், பூரணை-புஷ்கலை உடனான ஐயனார், ஆதிசாஸ்தாவின் திருக்கோலத்தில் இருப்பதாக காஞ்சி மஹா பெரியவர் கூறியதாகக் சொல்வர். சபரிமலை ஐயப்ப சுவாமிதான், சாஸ்தாவின் கடைசி அவதாரம் எனக் கூறுவர்.
மஹாசாஸ்தா
நான்கு கரங்களுடன்,யானை மீது அமர்ந்து காட்சி தருபவர்.ராகு தோஷம் போக்கும் சக்தி இவரிடம் உண்டு என்பர்.
பிரம்ம சாஸ்தா
குலம் தழைக்க இவர் ஆசி அவசியம். இரு மனைவியர் சகிதம் அமர்ந்து அருள் பாலிப்பவர்.
வீரசாஸ்தா
ருத்ர மூர்த்தியாக திகழும் இவர், ஆயுதம் ஏந்தி 4 கரங்கள் கொண்டு,குதிரை மீது அமர்ந்து அருள்பவர். கேது தோஷம் நிவர்த்திக்கு இன்னல் தீர இவரை வணங்குவர்.
ஞான சாஸ்தா
கல்லால மரத்தின் கீழ்,தமது சீடர்கள் சூழ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி போன்று அமர்ந்து,கையில் வீணையுடன் காட்சி தருபவர்.ஞானம்,பேச்சுத் திறமை போன்றவற்றை அளிப்பவர்.
சம்மோகன சாஸ்தா
தேவியருடன் காட்சி தரும் இவர், குடும்பம் காக்கும் தெய்வமாகவும்,ஒற்றுமை படுத்துபவராகவும் இருக்கின்றார்.
வேத சாஸ்தா
சிம்மவாகனம் மீது, தம் தேவியருடன் இருக்கும் இவர்,வேதம் தழைக்கவும்,கல்வி, கேள்விகளில் சிறக்கவும், வழி நடத்துபவர்.
கல்யாண வரத சாஸ்தா
தேவியருடன் காட்சி தரும் இவர், செவ்வாய் தோஷம் நீக்குபவர். திருமணத் தடை,விரைவில் திருமணம் போன்றவை இவரை வழிபட சரியாகும் என்கிறார்கள்.
தர்ம சாஸ்தா
சபரிமலை ஆலயத்தில், ஸ்ரீ சுவாமி ஐயப்பனாக, அருள் பாலிப்பவர். கலியுக தெய்வமான இவர், நித்ய பிரம்மச்சாரி. கார்த்திகை மாதம் மாலையிட்டு,விரதம் இருந்து,ஏராளமான பக்த கோடிகள், இருமுடி கட்டி, மலைக்கு வந்து தரிசனம் செய்வர். சகல விதமான துயரங்கள் நீங்க, வாழ்வில் வசந்தம் வீச, இவரை வழிபட்டுப் பலனடைவர்.
இது தவிர, அத்ரி முனிவர் வழிபட்டதாக தலபுராணம் கூறும் சாஸ்தா ஆலயம் ஒன்று, நாகர்கோவில்- கன்னியாகுமரி சாலையில் ஆஸ்ரமம் எனும் ஊரில் உள்ளது. "அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா" எனும் பெயரில் ஆலயம் உண்டு. இங்கு ஜடாமுடி, மார்பில் பதக்கம்,நெற்றி திருநீறு, அணிந்து ஒரு காலை தொங்கவிட்டபடி அமர்ந்து அருளுகிறார்.
கேரளத்தில், கொல்லம் சாஸ்தா கோட்டை, ஐயப்பன் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ராமர், போரில் வென்று, சீதாதேவியுடன் திரும்பி வருகையில், வழிபட்ட இடமாமிது. இங்கு, குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு,ஒரு அறக்கடடளையே உள்ளதாம். மண்டல பூஜை நாட்கள், மகரசம்கிர பூஜை பொன்ற பல விழாக்கள் நடக்கும் கோவிலிது.
நாகர் கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், சுசீந்திரமருகில், ஆஸ்ராமம் எனும் ஊரில்,1000 ஆண்டுகள் பழமையான,சாஸ்தா கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு, தாணுமாலய சுவாமி ஆலய வரலாற்றுடன் தொடர்புள்ளது. கண் தெரியாத பக்தர் ஒருவருக்கு,கண்களில் மை தீட்டி,சரிசெய்ய,அவரும் அகமகிழ்ந்து "அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா"என கூற,சாஸ்தா இங்கு "கண்களில் மை தீட்டிய கடவுள்" என வழிபடுவதாக வரலாறு.
மேலும் கேரளா, எர்ணாகுளம், காலடி அருகே உள்ள, "மஞ்சப்புரா அம்பாடத்து மாளிகா" எனும் திருக்கோவிலில், ஐயப்பனுக்கு, விக்ரஹமே இல்லை,மாறாக, வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை,ஒரு கல், ஆகியவற்றை ஐயப்பனாக வழிபடுகின்றனர். சனி தோஷம்,தீராத பல நோய்களுக்கு தீர்வு தரும் என்பதில் பிரசித்தி பெற்ற ஆலயமிது என்கிறார்கள்.
சரண கோஷம் கேட்டு, நாமும், ஐயப்பனை மனதார வேண்டி வழிபடுவோம்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
டாபிக்ஸ்