Parasuramar: தர்மத்தின் சமநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் பரசுராமர்
காசிப முனிவரிடம் மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தார் பரசுராமர். காசிபர், பரசுராமரிடம், பல்வேறு அரசர்களை வெற்றிகொண்டு பரசுராமர் அடைந்த பூமியினைத் தானமாகக் கேட்டார்.
மஹாவிஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் ஒன்று "பூகர்ப்பாயர்" என்பது. பூமா தேவியைத் தாங்கும் பெருமாளை, இப்படி அழைப்பர். "பூகர்ப்பாய நமஹா" எனச் சொல்லி வழிபட்டால்,மனபாரம் நீங்கும் என்பார்கள். பரமாத்மா, தாம் எடுக்கின்ற அவதாரத்திற்கேற்ப, அதற்குரிய தேகமும், உணர்வும்,தோற்றமும் கொண்டவராய்த், தம் திருவிளையாடலை நிகழ்த்துவார். தர்மத்தை நிலைநாட்ட, யுகந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர் பகவான் கிருஷ்ணர்.
தசாவதாரத்தில் பரசுராமர் அவதாரமும் 6வது அவதாரம் ஆகும். சிவனையே தமது ஆன்மிக குருவாகக் கொண்டவர் பரசுராமர். சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்து, தெய்வீகமான கோடாரியைப் பெற்றார். தேவர்களுக்கு , சிம்ம சொப்பனமாயிருந்த, முகுல் எனும் அரக்கியை, இக் கோடாரி கொண்டு சம்ஹாரம் செய்தார். பரசு எனும் கோடாரியைப் தாங்கி இருப்பதால் இவர் பரசுராமர் எனப்பட்டார்.
காசிப முனிவரிடம் மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தார் பரசுராமர். காசிபர், பரசுராமரிடம், பல்வேறு அரசர்களை வெற்றிகொண்டு பரசுராமர் அடைந்த பூமியினைத் தானமாகக் கேட்க, பரசுராமர் மகிழ்வுடன், அதை, உடனே தாரை வார்த்துக் கொடுத்தார். இதன் பின், பரசுராமரைப் பார்த்து, காசிபர் இனி, இது, தமக்குச் சொந்தமான பூமி எனவும், பரசுராமர் இங்கிருக்காது, வேறு தூர தேசம் போய்விடுமாறும் கூறினார்.
இதன்படி பரசுராமர் மனது மிகவும் கனத்தவராய், மேற்குக் கடற்கரையோரம் சென்றபின், விரக்தியில், தமது மழு ஆயுதத்தைத் தூக்கிக் கடலில் எறிய, அப்போது மிகவும் அதிசயமாக,கடல் சிறிது உள்வாங்க, அந்த பூமியை தனக்கு சொந்தமாக்கி, மீண்டும் தன்னிடமே வந்த ஆயுதத்தினால்,பூமியை சீர்படுத்தி, அங்கிருந்த படியே, சிவபெருமானை மனதில் ஏற்றித் தவம் செய்யத் தொடங்கினார். அதுவே, இன்றய கேரளா என நம்பப்படுகிறது. அது கடவுளின் நாடு எனும் பொருள் வரும்படிக்கு "பரசுராமக்ஷேத்ரம்" என அழைக்கப்படுகின்றது. இந்த விஷயங்களை மிக நன்றாக, அழகுடன் "சிவ மஹா புராணம்" விளக்கி நிற்கும்.
இனி போர் வேண்டாம் என ஆன்மிக வழியில், தமது, மனதை செலுத்தியவராக, போகும் இடங்களில் இறை வடிவங்களை ஸ்தாபித்துக் கொண்டே சென்றார். மனச் சாந்தி கிடைப்பதை உணர ஆரம்பித்தார். அப்படி வந்த போது காரமனை ஆறு, கிள்ளி ஆறு, பார்வதிபுத்ர ஆறு மூன்று நதிகளும் சேருமிடத்தில் உள்ள புனித தலமான "திருவல்லம்" வந்த பரசுராமருக்கு இங்கு கோவில் உண்டு. இந்த திருத்தலத்தில், இவரின் பாதம் பொறிக்கப்பட்ட பீடமும், கோடாரியுடன் நிற்கும் அழகிய சிலையும் உள்ளது. வேதவியாசர் திருவுருவம் உள்ளது. ஸ்ரீ பிரும்மாவின் திரு உருவச் சிலையை ஆதிசங்கரர் நிறுவியதாக சொல்கின்றனர். பகவதி, கணபதி,சன்னதிகளும் உண்டு. தினசரி வழிபாடு தவிர, "திருவோணம் ஆறாட்டு", பரசுராமர் ஜெயந்தி, விழாக்கள் மிகச் சிறப்பானவை . இத்தலம் "பிதுர்த்தர்ப்பணம்" செய்ய தகுந்த ஒரு இடம் என்று பெயர் பெற்றது.
மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தில், துணிச்சல், ஆற்றல், விவேகம் மற்றும் தாய், தந்தை சொல்லே உயர் வேதம் என காட்டிய ஒரு அவதாரமான பரசுராம (அவதார )ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.
கேரளம் தவிர, உடுப்பி குஞ்சருகிரி பரசுராமர் கோவில், அனந்தேஸ்வர் கோவில், அருணாசலப் பிரதேசத்தில் "பரசுராம் குண்ட்", நேபாளத்தில் உள்ள" பரசுராம் தாம்", கர்நாடகா "நஞ்சன்காட்", கண்டேசுவரர் கோவிலில், சுயம்பு லிங்கத்தை, இவர், பிரதிஷ்டை செய்த பின் , மாதங்க முனிவர்,கவுதம் முனிவர் போன்றோர் வழி பட்டதாக சொல்வர். இங்கு பரசுராமர் தவமிருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள அழகிய பீடம் "சாஸ்னா" இதில் பரசுராமரின் பாதங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர வேறுபல இடங்களிலும் இவருக்கு கோவில்கள் உண்டு. இவரது ஜெயந்தி நாளில் இவரை வணங்கி ,வழிபட்டு, வளம் பெறுவோம்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்