HT Yatra: அசுரனை அடக்கிய முருகன்.. மன்னன் உருவாக்கிய திருக்கோயில்
வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
![வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்](https://images.hindustantimes.com/tamil/img/2024/03/01/550x309/va_1709314418608_1709314429701.png)
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டிருப்பவர் முருக பெருமான். உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக அறுபடை வீடு கொண்டு தமிழ் மக்களின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார் முருக பெருமான்.
அறுபடை வீடு மட்டுமல்லாது பல்வேறு விதமான சிறப்பான கோயில் கொண்டு முருகப் பெருமான் விசேஷ அருளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக்கூடியது வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் இவர் கோடை ஆண்டவர் என அழைக்கப்படுகின்றார்.
அறுபடை வீடுகளுக்கு உள்ள சிறப்பு அனைத்தும் இந்த கோயிலுக்கும் உள்ளது. அறுபடை வீடுகளில் முருகப்பெருமானுக்கு என்னென்ன விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றதோ அனைத்து விதமான பூஜைகளும் இந்த முருக பெருமானுக்கும் நடைபெறும்.
தலத்தின் தகவல்கள்
இந்த வல்லக்கோட்டை ஊரில் வல்லன் என்ற அரக்கன் இருந்து வந்துள்ளார். இவர் தேவர்களுக்கு மிகவும் துன்பம் கொடுத்து வந்துள்ளார். அவருடைய துன்பத்தை தாங்க முடியாத தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளனர். இதுகுறித்து அறிந்த முருக பெருமான் வல்லன் அசுரனை வதம் செய்தார். அந்த அசுரனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இடத்தை வல்லனின் கோட்டையாக மாற்றினார் முருக பெருமான். இதனால் இந்த இடம் வல்லக்கோட்டை என அழைக்கப்படுகிறது.
தலத்தின் வரலாறு
பகிரதன் என்ற மன்னன் இலஞ்சி என்ற தேசத்தில் இருக்கக்கூடிய சங்கொண்டபுரம் என்ற ஊரை ஆண்டு வந்தார். ஒருமுறை இவரை காண்பதற்காக நாரத முனிவர் வந்துள்ளார். எப்போதும் ஆணவமாக இருக்கக்கூடிய மன்னன் நாரதரை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாரதர் அருகில் இருக்கக்கூடிய வனத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக பல நாடுகளில் வெற்றி கண்ட கோரன் என்ற அரக்கன் வந்துள்ளார். பகிரதன் மீது கோபமாக இருந்த நாரத முனிவர் கோரன் என்ற அசுரனிடம் சென்று பல நாடுகளில் வெற்றி கண்ட நீ இலஞ்சி என்ற தேசத்தை வெற்றி கண்டால் உனக்கு திக் விஜயம் கிடைக்கும் என வழக்கம் போல தனது வேலையை செய்துவிட்டு நாரதர் சென்று விட்டார்.
அதன் பின்னர் கோரன் இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்தார். இந்த போரில் பகிரதன் தோல்வியடைந்தார். தனது நாட்டை இழந்த மன்னன் காட்டிற்குச் சென்றார். அங்கு நாரத முனிவர் இருந்துள்ளார். உடனே தன்னை மன்னிக்கும்படி பகிரதன் நாரத முனிவரிடம் மன்னிப்பு கேட்டார்.
உடனே, நீ இழந்ததை மீண்டும் பெறவேண்டும் என்றால் துர்வாச முனிவர் தான் அருள்கூற வேண்டும் என நாரத முனிவர் பகிரதனிடம் கூறினார். பல காலம் கஷ்டப்பட்டு அந்த வழியாக வந்த துர்வாச முனிவரை பகிரதன் கண்டுபிடித்தான். நடந்ததை கூறி எனக்கு நல்வழி காட்டுங்கள் என பகிரதன் துர்வாச முனிவரிடம் கேட்டுள்ளார்.
பாதிரி மரத்தடியில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் உனது வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் என அவர் கூறியுள்ளார். அதன்படி தனது வழிபாட்டிற்காக முருக பெருமான் வள்ளி தெய்வானை உள்ளிட்டோரை கோயில் கட்டி வழிபாடு செய்தான் அவர் கட்டிய கோயில் தான் தற்போது இருக்கக்கூடிய வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என கூறப்படுகிறது.
அமைவிடம்
இந்த கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் உள்ள கிராமம் இந்த வல்லக்கோட்டை ஸ்ரீ பெரம்புதூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கே தங்கும் விடுதிகள் உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. தாம்பரத்திலிருந்து இந்த கோயிலுக்கு செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)