Kudaravalli 2024: இன்று ஆண்டாளை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kudaravalli 2024: இன்று ஆண்டாளை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்!

Kudaravalli 2024: இன்று ஆண்டாளை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்!

Manigandan K T HT Tamil
Feb 12, 2024 10:25 AM IST

Andal: திருப்பாவை 30 பாடல்கள் அனைத்திலும் பற்பல கருத்துகள் முன்னிருத்தப்படுகின்றன.அதில் 27 ம் பாடலில்,நோன்பு, நிறைவுற்ற பின், "நாங்கள் வேண்டுவது ,அணிமணி, மற்றும் பால்சோறு"எனப் பொருளுரைப்பர்.

ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ ஆண்டாள்

வடசொல் தவிர்த்துப், பைந்தமிழ் சொற்களால் பாமாலை அமைத்து, நல் பாசுரம் பாடியவர் ஸ்ரீ ஆண்டாள். கவிஞர்கள்,இவரது பாடலில், ஒவ்வொரு சொல்லுக்கும் உரை எழுதி மகிழ்வர். வருடங்கள் ஓடியும் வனப்பு மாறாத இனிமை வளம் கொண்ட வரிகள் என போற்றுவர். தமிழைத் தன்னுள் தேக்கியவர் ஆண்டாள். நாச்சியார் திருமொழியின் அத்தனை பாடல்களும், "கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்" என்பதை உறுதி செய்யும்.

"பற்றுக பற்றற்றான் பற்றினை,அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்கிற வள்ளுவன் குறள் நெறிக்குப் பொருளாகி, பற்றில்லாத தலைவன் பற்றினை மட்டுமே பற்றி, ஏனைய பற்றுகளை விட்டு நின்றவரிவர்.

"வராஹ க்ஷேத்ரம்" என்று வர்ணிக்கப்படும், ஸ்ரீ வில்லிபுத்தூர், சுமார் 2000 ஆண்டுகள் பெரும் பழமை வாய்ந்த சிறப்பானதொரு வரலாறு கொண்டது. மல்லி என்கிற அந்த நிலப் பரப்பை ஆண்ட, வில்லி எனும் குறுநில மன்னனின் பெயரால் அமைந்த ஊரது என்பர். மன்னரின் கனவில் தோன்றிய ஸ்ரீ கிருஷ்ணர், "விமலாக்ருதி" என்கிற வடபத்ரசாயி ஆலயத்தின் விமானம்,புற்றினால் மூடப்பட்டிருந்த விஷயம் கூறி,மன்னர் அதை எடுத்து ஆலயமாக்க,அதுவே பலரால் வளர்ந்து, இன்று பெரியதொரு ஆலயமாக பரிமளிக்கிறது.

தனக்கே உரியவள் ஸ்ரீ ஆண்டாள் என,அரங்கன் தெளிவு படுத்திய பின், "அகம்" மூலம் "பரம்" சென்ற பாங்கு, உலக வரலாற்றில், ஆண்டாளுக்கு மட்டுமே உரியது. மாதங்களில் நான் மார்கழி என்றார் மாதவன், பாவை வழி பாட்டுக்கென, ஆண்டாள் தேர்ந்தெடுத்த நாளும் மார்கழியே. நாடு செழிக்க ,மழை பொழிய, விரும்பிய கணவன் கிடைக்க, என்பது எல்லாமே இந்நோன்பின் நோக்கம் என்பார்கள். எனவே, நாம சங்கீர்த்தனம் அடிப்படையாக வைத்து, வையத்து வாழ்வீர்காளை, பக்தி செய்ய அழைப்பதே பொருள்.

திருப்பாவை 30 பாடல்கள். அனைத்திலும் பற்பல கருத்துகள் முன்னிருத்தப்படுகின்றன.அதில் 27 ம் பாடலில்,நோன்பு, நிறைவுற்ற பின், "நாங்கள் வேண்டுவது ,அணிமணி, மற்றும் பால்சோறு"எனப் பொருளுரைப்பர். மார்கழி 27ம் நாள்,ஆண்டாள் தன் நோன்பு விருதத்தைப் பூர்த்தி செய்த நாள்.இதை "கூடாரவல்லி" என போற்றுவர்.

27 வந்து பாசுரமானது

"கூடாரை வெல்லுஞ்

சீர்க்கோவிந்தா

உன்தன்னை பாடிப் பறை

கொண்டு யாம் பெறும்

சம்மானம்... எனத் தொடங்கி

முடநெய்பெய்து

முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்ந்தேலோர்

எம்பாவாய்" என முடியும்.

இதன்படி ஆண்டாள், நோன்பிருந்து வெற்றி கொண்டு கோவிந்தனை அடையும் நாளிது. இதன்படி ரங்கநாதருடன், ஆண்டாள் நாச்சியார் கலந்தார் என்பதைக் கொண்டாடும் நிகழ்வு கூடாரவல்லி. அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் கூடார வல்லி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்படும். பாவை நோன்பினை கடைபிடித்து, நியமங்களை அனுஷ்டித்து, பெருமாளை அடையும் ஆண்டாள் பாசுரங்கள், ஜீவனை உருக்கும் ஒரு பக்திப் பிரவாகம்.

பரந்தாமன் கையில் செங்கோல் ஏந்தி,ரங்க மன்னனாக, இன்முகம் கொண்டு, ஆண்டாளை கை பிடிக்கிறார் என்கிறது ஸ்ரீ வில்லிபுத்தூர் புராணம். இந்த பாடலைக் கேட்ட ஸ்ரீ கோவிந்தன், ஆண்டாளை திருவரங்கத்தில் ஏற்பதாக வாக்களித்த பொன்னான நாளே கூடாரவல்லி விழா. 

இந்நாளின் சிறப்பு அம்சம் அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய். இவை 108 பாத்திரங்களில் நைவேத்தியத்திற்காக வைக்கப்பட்டிருக்கும்‌. 250 கிலோ அரிசி, 15 கிலோ கற்கண்டு, கிலோ கணக்கு உலர் பழங்கள், பலமணி நேரம் சுண்டக்காய்ச்சித் தயாரிக்கும் சிறப்பான அக்காரவடிசல், வடபத்ர சாயி பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்படும்.

இன்றும், நிகழ்வைக் காட்டுவதற்காக ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, மறுநாள், பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. "கோடி நன்மைகள் கிடைக்கும் கூடார வல்லி நாள்" என புகழப்படும் இந்நாளில், நல்ல கணவர் கிடைக்க, வசந்த வாழ்வு மலர, உறவுகள் மேம்பட, அரங்கனையும்,சூடிக்கொடுத்த சுடர் கொடி ஆண்டாள் அன்னையையும் வணங்கி வழிபட்டு, அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்கு கொண்டு, நல்லாசி பெற்று வாழ்ந்திடுவோம்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்