Thookam Festival : கொல்லங்காடு பத்ரகாளியம்மன் தூக்கத் திருவிழா தொடக்கம்!
மார்த்தாண்டம் கொல்லங்காடு பத்திரகாளி அம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கொல்லங்காடு பத்திரகாளி அம்மன் கோயிலும் ஒன்று. இந்த கோயிலுக்குக் குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பெண்கள் வருவார்கள். அதற்காக இங்கே தூக்கத் திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த தூக்கத் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மூல கோவிலிலிருந்து வெங்கஞ்சி கோயிலுக்குக் கொடிமரம் கொண்டுவரப்படும். மாலை 3 மணிக்கு மூலக்கோயிலில் இருந்து திருவிழா நடைபெறும் கெங்கெஞ்சு கோயிலுக்கு அம்மன் மேள தாளங்களுடன் வருவார்.
அதன் பின்னர் இன்று இரவு 7 மணிக்குக் கொடியேற்றம் நடைபெறும். இந்த பிரசித்தி பெற்ற தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் குத்து விளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கிறார். இந்த திருவிழாவில் கன்னியாகுமரி உள்படப் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த திருவிழா தொடங்கிய நாள் முதல் அபிஷேகம், பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை எனத் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் மார்ச் 19ஆம் தேதி தூக்க நேர்ச்சை குலுக்கல் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மார்ச் 21ம் தேதி அன்று பன்னாட்டு மாநாட்டை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்க உள்ளார். 23ஆம் தேதி அன்று தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடைபெற உள்ளது. மார்ச் 24ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் வண்டி ஓட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடைபெற உள்ளது.
மார்ச் 25ஆம் தேதி அன்று தூக்கக் காரர்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம் நடைபெறும், இதில் அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அன்று காலை பச்சிளம் குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.