Natarajar Sabhai: நடராஜர் கடவுள் வீற்றிய ஐந்து அம்பலங்கள் பற்றி தெரியுமா?
இந்து கடவுளான சிவன் நடன கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள சிவத்தலங்களில் முக்கிய ஐந்து தலங்களை பஞ்ச சபைகள் என்று அழைக்கிறார்கள். இந்த தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன.
பஞ்ச சபைகள் என்றும் ஐம்பெரும் சபைகள், ஐம்பேரும் அம்பலங்கள் என்றும் அழைக்கப்படும் இவை பொன்னம்பலம், வெள்ளி அம்பலம், ரத்தின அம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் என்று கூறப்படுகிறது. இவை முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள திருத்தலங்களில் உள்ளன.
பொன்னம்பலம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் வீற்றியிருப்பது பொன்னம்பலம். இந்த கோயிலை புராணத்தில் திருமூலட்டநாதர் ஆலயம் என அழைத்தார்கள். ஆனால் தற்போது இதனை சிதம்பரம் நடராஜர் கோயில் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும்.
இங்கு அருள்பாலிக்கும் நடராஜர் வீற்றிருக்கும் இடமே, பொன்னம்பலம், பொற்சபை என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர கனக சபை, பொன் மன்றம் போன்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள்.
பெரும்பாலான சிவத்தலங்களில் சிவன் லிங்க வடிவில் அமைந்திருக்க, இங்கு நடராஜர் வடிவில் உள்ளார். இங்குள்ள நடராஜரின் நடனக்கோலம் ஆனந்த தாண்டவமாகும். நடராஜர் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதர் முனிவருக்கும் தனது பிரபஞ்ச நடனத்தை தைப்பூச திருநாளில் ஆடிக்காட்டியதாக நம்பிக்கை உள்ளது.
இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார்.
வெள்ளி அம்பலம்
சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோயில் தான் நடராஜரின் திருநடனம் கண்ட வெள்ளி அம்பலமாக திகழ்கிறது. இதனை வெள்ளி சபை, வெள்ளி மன்றம் என்றும் அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனம் புரியும் நிலையில் காட்சி தருகிறார். இறைவனின் நடனம் சந்தியா தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்தை காணவந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதர் முனிவரும் சிதம்பரம் நடராஜனின் ஆனந்த தாண்டவத்தை காணாமல் உணவு உண்ண மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தான் ஆடிய கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் என கூறப்படுகிறது.
பிற தலங்களில் எல்லாம் இடது காலை தூக்கி ஆடும் நடராஜர் வெள்ளியம்பலத்தில் வலது காலை தூக்கி ஆடுகிறார். நடன கலையை கற்று தேர்ந்த பாண்டிய மன்னனானராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, நடராஜர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்கு கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டி கொள்ள, நடராஜரும் \இடதுகாலை ஊன்றி வலது காலை தூக்கி ஆடியதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது.
ரத்தின அம்பலம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்ல, காளியுடன் போட்டி நடனம் ஆடிய சிவபெருமான், கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையூறு அடையாதவாறு இடது காலால் எடுத்து உயரத்தூக்கி எடுத்த காதணியை, அதே கால்களால் அணிய முற்பட, காளியால் அந்தக் கோலத்தில் ஆடமுடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொள்ள அவரை வெற்றி கண்டதாக புராணத்தில் கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தின் இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலி அம்மையாகவும் உள்ளார்கள். இறைவன் நடனம் ஆடிய இடம் ரத்தின அம்பலம், ரத்தின சபை, மணி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை தரையில் ஊன்றி இடது காலால் காதணியை மாட்டும் தோரணையில் காட்சியளிக்கின்றார். காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தை காணும் பேறு பெற்றார் என சொல்லப்படுகிறது. இங்கு இறைவன் ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் என்று போற்றப்படுகிறது.
தாமிர அம்பலம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று, காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோயில். இங்கு நடராஜர் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் இடத்தை தாமிர அம்பலம் என்று அழைக்கிறாரகள்.
இதற்கு தாமிர சபை, தாமிர மன்றம் என்ற பெயர்களும் உண்டு. இந்த சபையில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்தை திரு தாண்டவம் என்று அழைக்கிறார்கள்.
சித்திர அ்ம்பலம்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் திருக்கோயில், அகத்திய முனிவர் வழிபாடு செய்த திருத்தலம் ஆகும். இங்கு சிவபெருமான் நடனம் புரிந்த இடம், சித்திர அம்பலம், சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எமனை காலால் எட்டி உதைத்த ஈசன் தன் மனைவி பார்வதியுடன், மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் இறைவன் ஆடிய நடனம் திரிபுர தாண்டவம் ஆகும். இந்த தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. அந்த இடமே சித்திர சபை. இதனை 'சித்திர அம்பலம்', 'சித்திர மன்றம்' என்றும் அழைப்பார்கள்.
இந்த கோயிலின் தல விருட்சம் குறும்பலா என்பதால் குறும்பலாவீஸ்வரர் கோயில் எனவும், கோயில் சங்குவடிவ அமைப்பு கொண்டுள்ளதால் சங்குக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.
டாபிக்ஸ்