Karadaiyan Nonbu 2024: 'கணவருக்கு எந்த தீங்கும் வரக் கூடாது என பிரார்த்திக்கும் நாள்'-காரடையான் நோன்பின் முக்கியத்துவம்
Karadaiyan Nonbu 2024: எமனுக்கு நன்றி செலுத்த, சாவித்திரி, கார்கால, விதை நெல் குத்திய பச்சரிசி மாவு உடன், வெல்லம், காராமணி கலந்து வெல்ல அடையும், உப்பு கலந்த அடையும், தனித் தனியாக செய்து, அந்தக் காரடையுடன் வெண்ணை சேர்த்துப் படைக்க, அதுவே இன்றுவரை விரத நைவேத்ய வழக்கமாயிற்று.
ஒவ்வொரு பெண்ணும், தன் கணவருக்கு எந்த தீங்கும் வரக்கூடாது, அவர் நலமுடன், நோய் நொடி இல்லாத வாழ்வு பெற்று, குடும்பம் காத்தருள வேண்டும் என்ற நோக்கம் கொண்டு, அனுஷ்டிக்கும், ஒரு நல்ல விரதம் காரடையான் நோன்பு.
காமாட்சி நோன்பு,கேதார கௌரி விரதம்,சாவித்திரி விரதம்,மாசிக் கயறு நோன்பு போன்ற பல பெயர்களில் அனுஷ்டிக்கப்படும் இந்நோன்பு,மாசி மாதம் முடிந்து,பங்குனி மாதம் தொடங்கும் வேளையில்,சரடு அணிந்து கடைபிடிக்கப்படுகிறது. சத்யவான், சாவித்திரி கதையே இவ்விரதம் வரக் காரணம் என்பர்.
எமனுக்கு நன்றி செலுத்த, சாவித்திரி, கார்கால, விதை நெல் குத்திய பச்சரிசி மாவு உடன், வெல்லம், காராமணி கலந்து வெல்ல அடையும், உப்பு கலந்த அடையும், தனித் தனியாக செய்து, அந்தக் காரடையுடன் வெண்ணை சேர்த்துப் படைக்க, அதுவே இன்றுவரை விரத நைவேத்ய வழக்கமாயிற்று.
'கணவரை பிரியாத வரம் வேண்டும்'
நைவேத்யம் செய்து சரடு காட்டிக்கொள்ளும் போது"உருகாத வெண்ணையும் காரடையும் நான் தந்தேன், ஒரு நாளும் என் கணவரைப் பிரியாதிருக்க வரம் தா" என வேண்டுவர்.
மஹாபாரதத்தில்,வன பர்வத்தில், திரௌபதியும், யுதிஷ்டிரரும் சிறிதுமனக் கிலேசத்தில் இருந்தபோது, மனச்சோர்வு நீங்கி, ஊக்கம் பெறுவதற்கு மார்கண்டேய மகரிஷி, அவர்களிடத்து, சத்தியவான்-சாவித்திரி கதையினைக் கூறுகிறார்.
மந்திர நாட்டு அரசனின் பெண் சாவித்திரி, சகல சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய பெரும் பதி விரதை, கற்புக்கரசி. குல தெய்வமான" ஸவித்ரு" எனும் சூரிய பகவான் ஆசி வேண்டி சாவித்திரி பெயர். பேராற்றலும், தூய்மையும் கொண்ட பக்தை.
இவளது மனதிற்குப் பிடித்த மணவாளனைத் தேரந்தெடுக்க சமயம் வந்த போது, நாடு,செல்வத்தை, வஞ்சகர்களிடம் இழந்து, காட்டில், அரசியுடன் வாழும் சாளுவதேச மன்னன், துயுமத்ஸைனருடைய, மகன் சத்யவானை பார்வையற்ற,பெற்றோரை காப்பாற்றும் செயல் ஆகியன வசீகரிக்க அவனை மணக்க தேர்வு செய்தாள்.
அந்த நாளிலிருந்து, ஒரு ஆண்டில், அவன் இறந்து படுவான் எனும் அவனது விதியினை நாரதர் கூற, சாவித்திரியின் தந்தையும், தாயும் பதறி, துயர், துன்பம், வேதனை அடைந்து, மகள் வசம் எடுத்தியம்ப,அவளோ முடிவை மாற்றாது, மணம் செய்து கொண்டு காடு நோக்கி பயணமானாள்.
விதி முடியும் நாளுக்கு 3 தினங்கள் முன்பிருந்தே, உறங்காது, விரதம் இருந்து, மரம் வெட்டச் சென்றபோது, தானும் சென்று,அவன் கீழே சாய, மடியில் தாங்கி, எமன் வருவதை அறிந்து, பலவாறு வாதிட்டு,மூன்று வரங்களைப் பெற்று,அதன் மூலம் தன் கணவனையும், அவன் தாய் தந்தையரைக் காத்து,வம்சவிருத்திக்கும் வித்திட்டு,அவன் விதியை மாற்றிய வீரப்பெண்மணி என போற்றுதலுக்கானாள்.
"ப்ருஹத்தர்ம புராணம்", இந்திரன், அக்னி, நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், ப்ரம்மா, அநந்தன், எமன் என்கிற பத்து திக்பாலர்கள், பிரபஞ்ச திசை காப்பாளர்கள் என பட்டியலிடும். எமன், நல்லவர்களுக்கு இனியவராகவும், கொடியவர்களுக்கு கருத்த உருவமும், கையில் காலதண்டமும் கொண்டு, தோன்றுவார் என "ஸ்கந்த புராணம்"கூறும். ஆனால், சிலசமயங்களில், இவரையும் மிஞ்சுபவருண்டு என "வராஹ புராணம்" கூறும்.
வேண்டாத சலனங்களை ஒதுக்கிவிட்டு, சித்தத்தின் ஆற்றலை ஒரு முகப்படுத்தினால், எமனையும் வெல்லலாம் என்பதே, இக்கதையின் உட்பொருள். தமிழகத்தில் இந்நாளை, மீன சங்கராந்தி நாள் எனவும், ஒடிசாவில் ஆனி மாத அமாவாசை எனவும், குஜராத், மஹாராஷ்ரா, கர்நாடகாவில் ஆனி மாதம் பௌர்ணமி அதாவது வட பௌர்ணமி (வடம் என்பது ஆலமரத்தைக் குறிக்கும்) எனப் பெயரிட்டு, இம்மரத்தைச்சுற்றி சரடு மஞ்சள் கட்டி வழிபடுவர்.
தலைசிறந்த கற்புக்கரசி, பார்வையற்ற முதியவர்கள் நலன் நாடி, தளராத சேவை செய்தவள், பணிவான புத்திசாலி, அர்த்தமுள்ள வாதம்," அனைத்தும் எமனை ஈர்க்க,"மாசியும், பங்குனியும் சேரும் சமயத்தில் உன் கணவன் பிழைப்பான். இன்று சாவித்திரியை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு, நல்லாசி கிடைக்குமாக, எனவும், அவர்கள் மனமொத்த தம்பதியர்களாக வாழ்வர்," கூறியதாகவும் ,அதன் காரணமே, இவ்விரதத்தின் ஆன்மிக அஸ்திவாரம் என்றும் கூறுவர்.
"கலங்காது கண்ட வினைக் கண் துளங்காது
தூக்கக் கடிந்து செயல்"
ஏற்றுக் கொண்ட செயலை, மனம் கலங்காமலும், சோர்வு அடையாமலும், காலம் தாழ்த்தாமலும் செய்து முடிக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை
தொடர்புக்கு: manivks47@gmail.com
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்