Kanchipuram: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்திருவிழா : 76 அடி உயர தேரில் வலம் வந்த சுவாமிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanchipuram: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்திருவிழா : 76 அடி உயர தேரில் வலம் வந்த சுவாமிகள்!

Kanchipuram: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்திருவிழா : 76 அடி உயர தேரில் வலம் வந்த சுவாமிகள்!

Karthikeyan S HT Tamil
Jun 06, 2023 01:50 PM IST

Kanchipuram Varadaraja Perumal Temple Car Festival: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 31 ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆம் தேதி கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகிறார்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 7 ஆம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 73 அடி உயரமுள்ள 7 நிலை கொண்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா... கோவிந்தா... என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்துச்செல்ல திருத்தேர் பவனி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும், ஆங்காங்கே பொது மக்களுக்கும், பக்தர்களுக்கும் குடிநீர், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. முன்னதாக, மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேர்த்திருவிழாவை துவக்கி வைத்தனர்.

திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 3.45 மணி அளவில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோயிலில் இருந்து ராஜநடையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.

இந்த தேரோட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு மக்கள் கடலாகக் காட்சி அளிக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்