தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: வரம் கேட்ட பிரம்மதேவர்.. தடுக்க முயன்ற சரஸ்வதி.. படைப்பாற்றலை கொடுத்த சிவபெருமான்

HT Yatra: வரம் கேட்ட பிரம்மதேவர்.. தடுக்க முயன்ற சரஸ்வதி.. படைப்பாற்றலை கொடுத்த சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 06:00 AM IST

Arulmigu Brahmapureeswarar Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரக்கூடிய கோயில்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.

வரம் கேட்ட பிரம்மதேவர்.. தடுக்க முயன்ற சரஸ்வதி.. படைப்பாற்றலை கொடுத்த சிவபெருமான்
வரம் கேட்ட பிரம்மதேவர்.. தடுக்க முயன்ற சரஸ்வதி.. படைப்பாற்றலை கொடுத்த சிவபெருமான்

HT Yatra: வரலாறுகளை கடந்து எத்தனையோ சிவபெருமான் கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. உலகம் முழுவதும் தனக்கென மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். திரும்பவும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது சிவபெருமானை குலதெய்வமாக வழிபாடு செய்து வரும் எத்தனையோ குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வழிபாடு செய்பவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

மன்னர்கள் காலத்தில் சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வந்துள்ளார். குறிப்பாக சோழர்களுக்கு தங்களது குலத்தை வழிநடத்தக்கூடிய தெய்வமாக சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளன. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சான்றாக இருந்து வருகிறது.

தங்கள் கலைநயத்தையும், தெய்வ வழிபாட்டையும் நிரூபிப்பதற்காக எத்தனையோ கோயில்கள் தமிழ்நாட்டில் மன்னர்களால் அமைக்கப்பட்டு பல நூறு ஆண்டுகளைக் கடந்து இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வரக்கூடிய கோயில்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் அமைந்துள்ள அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

பல கோயில்களில் சிவபெருமான் மற்றும் அம்பாள் சன்னதிக்கு நடுவில் முருகப்பெருமானின் சன்னதி அமைந்திருப்பது பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் அம்பாள் மற்றும் சிவபெருமான் சன்னதிக்கு நடுவில் விநாயகர் பெருமாளுக்கு சன்னதி அமைந்திருக்கும். இது வேற எந்த கோயில்களிலும் காண முடியாத தனி சிறப்பாகும்.

மூலவராக வீற்றிருக்கக்கூடிய பிரம்மபுரீஸ்வரர் கஜபுரிஷ்ட விமானத்தில் கிழக்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். இந்த தளத்தில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

காஞ்சி பெரியவர் இந்த கோயிலுக்கு பலமுறை வந்து வழிபாடு செய்து விட்டு சென்றுள்ளார் அதன் காரணமாகவே கோயிலின் தென்புற பக்கத்தில் காஞ்சி பெரியவருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு நடுவில் அமர்ந்திருக்க கூடிய கணபதி சன்னதியானது சோமகணபதி சன்னதி என அழைக்கப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கோயிலை பலரும் சோம கணபதி கோயில் என அழைக்கின்றனர்.

தல வரலாறு

சிவபெருமானின் இடது பாகத்தில் திருமால் தோன்றினார். அதற்குப் பிறகு தனது தொப்புளில் இருந்து தோன்றிய தாமரை மூலம் பிரம்மதேவரை படைத்தார். பிரம்ம தேவர் தனக்கு இந்த உலக உயிர்களைப் படைக்கக்கூடிய ஆற்றலை கொடுக்கும்படி சிவபெருமானிடம் கேட்டார்.

உடனே பூலோகத்தில் இருக்கக்கூடிய காஞ்சிபுரத்திற்கு சென்று தன்னை நினைத்து தவம் செய்யும் படி சிவபெருமான் பிரம்மதேவரிடம் கூறினார். மனதை ஒருமைப்படுத்தி தாங்கள் தவத்தை மேற்கொண்டால் நான் உங்களுக்கு படைப்பாற்றலை கொடுக்கிறேன் என சிவபெருமான் கூறினார்.

உடனே பிரம்மதேவர் அங்கு சென்று தனது தியானத்தை தொடங்கினார் அதற்கு பிறகு சிவனுக்காக செய்யப்படும் சோமயாகம் ஒன்றை நடத்த விரும்பியுள்ளார். ஆனால் இந்த யாகத்தை தனது மனைவியோடு நடத்தினால் மட்டுமே முழு பலன்களும் கிடைக்கும்.

இந்த யாகத்தில் பிரம்ம தேவன் நடத்தும் பொழுது கருத்து வேறுபாடு காரணமாக பிரம்மதேவரின் மனைவியான சரஸ்வதி அவரை விட்டு பிரிந்து இருந்தார். இதனால் சரஸ்வதி தேவி அந்த யாகத்தில் கலந்து கொள்ளவில்லை. உடனே பார்வதி தேவி சாவித்திரி என்ற தேவியை உருவாக்கி யாகத்தை தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து அறிந்த சரஸ்வதி தேவி ஒரு நதியாக உருவாக்கி அந்த யாக குண்டத்தை அளிப்பதற்காக முயற்சி செய்தார். உடனே அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிரம்மதேவர் சிவபெருமானை நோக்கி வழிபட்டார். உடனே சிவபெருமான் திருமால் இடம் இது குறித்து கூற அந்த நதியை தடுத்து நிறுத்தும் அணையாக திருமால் படுத்தார்.

அதன் பின்னர் யாகத்தின் உண்மை புரிந்து சரஸ்வதி தேவி தனது தவறை உணர்ந்து தனது கணவரான பிரம்மதேவரிடம் மன்னிப்பு கேட்டு சரணடைந்தார். யாகத்தின் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் பிரம்மதேவருக்கு உலக உயிர்களைப் படைக்கும் படைப்பாற்றலை வரமாக கொடுத்தார்.

அதன் பின்னர் தான் தவமிருந்து யாகம் நடத்திய இந்த தலத்தை நீங்கள் உங்களுடைய ஆஸ்தான தலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சிவபெருமானிடம் பிரம்ம தேவர் கூறினார். அதற்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அப்படியே ஐக்கியமானார். அதன் காரணமாக இந்த திருக்கோயில் சிவாஸ்தானம் என அழைக்கப்படுகிறது. பிரம்மன் வழிபாடு செய்த காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9