Melukote: ஜெயலலிதா பிறந்த மேலுக்கோட்டை ஊரிலுள்ள நரசிம்மர் கோயிலில் ஓய்ந்தது வடகலை - தென்கலை பஞ்சாயத்து - எப்படி?
ஜெயலலிதா பிறந்த ஊரிலுள்ள கோயில், 52 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கலைக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுக்கோட்டை யோகநரசிம்ம சுவாமி கோயிலில், அரை நூற்றாண்டுகளுக்குப் பின், இந்த திருத்தலம் வடகலை கோயிலா அல்லது தென்கலை கோயிலா எனும் பிரச்னை தீர்ந்துள்ளது. இக்கோயிலுக்கும் தமிழர்களுக்கும் 900 ஆண்டுகால தொடர்பு இருக்கிறது. இக்கோயில் அமைந்துள்ள மேலுக்கோட்டை கிராமம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த ஊர் என அடையாளப்படுத்தப்படுகிறது.
மேலுக்கோட்டை ஸ்ரீ யோகநரசிம்மர் கோயில் பெயர் தொடர்பாக 52 ஆண்டுகளாக சர்ச்சை நீடித்தது. இந்நிலையில் பாண்டவபூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மேலுக்கோட்டை கோயிலானது, தென்கலைக்கு உரியது எனத் தீர்ப்பு வந்துள்ளது.
மேலுக்கோட்டை கோயில் நிர்வாகக் குழுவின் செயல் அலுவலரே வந்து, கோயிலின் சிறிய கோபுரத்தில் இருந்த வடகலை பெயரைத் துடைத்து, நீதிமன்ற உத்தரவுப்படி தென்கலை பெயரைச் சேர்த்தார்.
கர்நாடகாவின் புகழ்பெற்ற நரசிம்ம ஸ்தலங்களில் ஒன்றான மேலுக்கோட்டை மலையில் உள்ள ஸ்ரீயோகநரசிம்மசுவாமி கோயிலின் சின்னகோபுரத்திற்கு ஜனவரி 25ஆம் தேதி மாலை ‘தென்கலை’ எனப் பெயர் சூட்டியதன் மூலம் அரை நூற்றாண்டு காலமாக நீடித்த தர்க்கரீதியான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
என்ன சர்ச்சை?
மேலுக்கோட்டை யோகநரசிம்மசுவாமி கோயிலின் சின்னகோபுரம், 1972-ல் திருப்பணியின் போது, பாண்டவபூர் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், ‘வடகலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1973ல், வடகலை என்ற பெயருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இப்பெயர் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. இதுதொடர்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பினைப் பெற்றுக்கொள்ளும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக 22 ஆண்டுகள் நீண்ட விசாரணை நடந்தது. இந்நிலையில் 29 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை ஜனவரி 25ஆம் தேதி வழங்கிய உரிமையியல் நீதிமன்றம், சின்னகோபுரத்தில் இருந்த வடகலைப் பெயரை நீக்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் பேரில், கோயில் செயல் அலுவலர் மகேஷ், பருபதேகரா ஸ்ரீதர், அர்ச்சகர் நாராயணபட், சமையலறைக் காப்பாளர் எம்.கே.ராமசாமி ஐயங்கார், பேராசிரியர்கள் ஸ்ரீரங்கம்சால்வநாராயணன், வித்வான் பி.வி. ஆழ்வார், யோகநரசிம்மசுவாமி கோயிலின் உட்புறம் ஆய்வு செய்யப்பட்டது.கோட்டையில் இருந்த வடகலைப் பெயர் நீக்கப்பட்டு, தென்கலை என்றப் பெயர் சேர்க்கப்பட்டது.
இரண்டு நூற்றாண்டு கால சர்ச்சை:
மேலுக்கோட்டை யோகநரசிம்மசுவாமி கோயிலின் பெயர் தொடர்பான சர்ச்சை இரண்டு நூற்றாண்டுகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது.
1814ஆம் ஆண்டில், மைசூர் மகாராஜா ஸ்ரீகிருஷ்ணராஜ உடையார், தென்கலை பாரம்பரியம் கொண்டவர் என்பதால், கோயில் மூலவரான யோக நரசிம்ம சுவாமிக்கும் கோபுரத்திற்கும் ‘தென்கலை’ என்று பெயரிட வேண்டும் என்று ஆணையிட்டார். அது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 1972ஆம் ஆண்டின் இறுதியில், கொல்கத்தா விஷ்ணு கோயில்கள் மறுசீரமைப்பு அறக்கட்டளை யோகநரசிம்ம ஆலயத்தினை புதுப்பிக்கும்போது, மைசூர் பரகால மடத்தின் செல்வாக்கின்கீழ், பாண்டவபூர் வட்டாட்சியர், யோக நரசிம்ம சுவாமி கோயிலின் சின்ன கோபுரத்துக்கு ‘வடகலை’ என்று பெயரிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆர்.கிருஷ்ணய்யங்கார், அழகியமணவாளன் மற்றும் தென்கலைப் பாரம்பரிய ஆசிரியர்கள், சட்ட விரோதமான வட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, 'தென்கலை’ என்ற பெயரை 1973ல் சூட்டக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் சமரசம் செய்து கொள்ள கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1973-ல், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி மனுதாரர் பாண்டவபூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த கீழமை உரிமையியல் நீதிமன்றம் கடந்த 2001ம் ஆண்டு மேலக்கோட்டையில் உள்ள செல்வநாராயணசுவாமி கோயிலும்; மலையில் உள்ள யோகநரசிம்மசுவாமி கோயிலும் 'தென்கலை’ பாரம்பரிய கோயில்கள் என்று தீர்ப்பளித்தது.
ஆனால், யோகநரசிம்மசுவாமி மலையின் சிறிய கோபுரத்தில் இருக்கும் 'வடகலை’ என்ற பெயரை அகற்ற அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக பாண்டவபூர் மனுதாரர் 2002-ல் மேல்முறையீடு செய்தார். அதன் தீர்ப்பு ‘தென்கலையினருக்கு’ சாதகமாக தற்போது வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, ஐம்பது வருடங்களாக சின்னகோபுரத்தில் நீடித்து வந்து பெயர் சர்ச்சை தர்க்கரீதியாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், மனுதாக்கல் செய்த யாரும் உயிருடன் இல்லை.
பெயர் வித்தியாசம் தெரிந்துகொள்வது எப்படி?
ஊர்த்துவபுண்டரின் பெயரிடலின் வடிவத்தின்படி, வைணவத்தில் தென்கலை - வடகலை என இரண்டு வகைகள் உள்ளன. கோபிசந்தனம், முத்திரை, அங்கராக்ஷதங்கள் வைஷ்ணவர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் ஆகப் பார்க்கப்படுகிறது. நெற்றியில் நடுவில் இடும் நாமம் Y வடிவத்துடன் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது ‘தென்கலை’ என்றும்; U வடிவத்துடன் சிவப்பு நிறத்தில் திலகம் இடம்பெற்றிருந்தால், அது 'வடகலை' என்று அடையாளம் காணப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்