Mahaswamigal: சிவபெருமானின் கருணை, மகிமைகளைப் பற்றி காஞ்சி மகாசுவாமிகள் கூறியது என்ன?
"அதுமட்டுமல்லாமல் வேறு வேறு வடிவங்களில், பல ரூபங்களில் ஆட்கொள்ள வருகிறார்."

பக்தர்களுக்கு, மஹாபெரியவாளிடம் ஏற்பட்டுள்ள, எண்ணற்ற அனுபவங்கள், படிக்கப் படிக்கத் திகட்டாதத் தெள்ளமுது. எண்ணிலடங்காத அற்புதங்கள், ஆச்சரியங்கள், அதிசயங்கள், அளவிட முடியாத தன்மை கொண்டவை. இருந்த இடத்தில் இருந்தே, எங்கோ, நடக்கும் விஷயங்களை, அவர், நேரில் பார்ப்பது போல கூறும் பொழுது, கேட்பவரது உள்ளமும், உடலும் சிலிர்த்துத்தான் போகும். இத்தகைய நேரங்களில், பக்தன் அடைகின்ற பேரானந்தப் பெருவெள்ளத்தை, வார்த்தைகளிட்டு, எழுத்தில் வடிப்பது மிகவும் சிரமம்.
"சிவாய நமவெனச் சிந்தித்திருப்போர்க்கு,
அபாயம் ஒரு நாளுமில்லை" என்பர்.
மானுடம் மாயையில் மயங்கி, வீணாக அழிவதை தடுக்கும் அரணாகவுள்ள மஹாபெரியவாளின் போதனைகள், நாளை உயர்ந்த வேதங்களாகப் போற்றப்படும்.
ஒருமுறை காஞ்சிபுரம் மடத்தில், மஹாபெரியவா, சிவபெருமானின் கருணை, மகிமைகளைப் பற்றிப் பேசும் பொழுது, "இந்தப் பிரபஞ்சம் முழுவதும், கடவுளின் அருள் சக்தி பரவியுள்ளது, நம் கண்களுக்கு அது தெரிவதில்லை, ஆனால் கோயில்களில் மட்டும் கடவுள், உருவத்துடன் காட்சி தருகிறார் என்கிற ஐயம் ஏற்படலாம்" எனக் கூறி நிறுத்திவிட்டு,
மீண்டும் தொடர்ந்து, "வீட்டில் பெண்கள் நெய் உருக்கும்போது, உருக்கப்பட்ட நெய், தண்ணீர் போல நிறமற்று இருக்கும், அதையே ஒரு பாத்திரத்தில் ஊற்ற, அது வெண்மையாக மாறிவிடும். நிறமே இல்லாத ஒன்றுதான், இப்போது நிறத்துடன், தெரிகின்றது.ஆனால், இரண்டும் ஒரே நெய்தான். அதுபோல, உருவமற்று இருந்தாலும், நமது இதயத்தில் பக்தி வளர, வளர, அதற்குக் கட்டுப்பட்டு, கடவுளானவர் உருவம் தாங்குகிறார்"
"அதுமட்டுமல்லாமல் வேறு வேறு வடிவங்களில், பல ரூபங்களில் ஆட்கொள்ள வருகிறார்." என விளக்கி, நம்மைப் பரவசத்தின் எல்லையில் நிற்க வைத்து, பிறகு தொடர்கிறார். " இறைவனது மோகன ரூபங்கள் தான் எத்தனை! எத்தனை! ஒருபுறம்,ஆபரணங்கள் ஏதுமின்றி,பிட்சாடன மூர்த்தியாக, இயற்கை அழகுடன்,மற்றொரு புறம், அழகே உருவெடுத்த, ஸ்ரீ சுந்தரேஸ்வரராக, மணக்கோலத்தில், அருள் புரிகின்றார்."
"பக்தர்களின்,பயம் போக்கி அபயம் தரும்,பைரவராக தோற்றம் தருகிறார். துன்பங்களனைத்தையும் போக்கும் வீரபத்ர சுவாமி உருவத்திலுமிருக்கிறார், தரிசிப்பவர் மனம் மகிழும் வண்ணம்,நடனமாடும் நடராஜரும் அவரே, அனைத்திற்கும் மேலாக, ஞானத்தை அருளுகின்ற, முனிவர்களுக்கும் உபதேசிக்கும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியாகவும் தோன்றுகிறார்.இப்படி சிவன், 64 கோலங்களில். அருள் பாலிக்கிறார்" எனக் கூறிய பின்பு,
"உலகை படைக்கும் பிரம்மாவும் அவரே, காக்கும் மஹாவிஷ்ணுவும் அவரே, உலகை சம்ஹாரம் செய்து, தன்னுள்ளடக்கும் சிவனும் அவரே. இப்படி ஒரு அருட்சக்தியே, மும்மூர்த்திகளாகவும் திகழ்கின்றது.
" சிந்தை குளிர சிவனை வணங்கினால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கும்"
என்று, காஞ்சி மஹா பெரியவரின், அற்புத விளக்கம் கேட்டு மகிழாத மனம் உண்டோ? அந்த தேனினும் இனிய தெய்வத்தின் குரல் கேட்டு, அவரது சித்தி நாளான இன்று,மனம் மகிழ்வோம், வணங்கி வளம் பெறுவோம்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

டாபிக்ஸ்