வெளிநாடு செல்வது யோகமா? தோஷமா?.. கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும்?.. ஜோதிடர் கூறுவது என்ன? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வெளிநாடு செல்வது யோகமா? தோஷமா?.. கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும்?.. ஜோதிடர் கூறுவது என்ன? - விபரம் இதோ!

வெளிநாடு செல்வது யோகமா? தோஷமா?.. கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும்?.. ஜோதிடர் கூறுவது என்ன? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 27, 2025 01:37 PM IST

வெளிநாட்டிற்கு செல்வதை நாம் பெருமையாக கருதினாலும், தாய்நாட்டை விட்டு செல்வதை தோஷம், பரதேசவாசம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாடு செல்வது யோகமா? தோஷமா?.. கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும்? - ஜோதிடர் கூறுவது என்ன?
வெளிநாடு செல்வது யோகமா? தோஷமா?.. கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும்? - ஜோதிடர் கூறுவது என்ன?

இது போன்ற போட்டோக்கள்

"சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?" என்ற சினிமா பாடல் இந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும். காரணம் உள்நாட்டில் முதலாளியாக இருந்தாலும், வெளிநாட்டில் தொழிலாளியாக சம்பாதித்து வாழ்வதையே பாக்கியமாகவும், பெருமையாகவும் பலர் கருதுகின்றனர். வெளிநாட்டிற்கு செல்வதை நாம் பெருமையாக கருதினாலும், தாய்நாட்டை விட்டு செல்வதை தோஷம், பரதேசவாசம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.

காலம், தேசம், சுருதி, யுக்தி, வர்த்தமானம், ஜாதி, மதம், நிறபேதம் என்ற சொல்லாடல் ஜோதிடத்தில் உண்டு. காலத்திற்கு ஏற்பவும், இருக்கும் நாட்டிற்கு தகுந்தபடியும் பலன் சொல்ல வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியூர், வெளிமாவட்டத்திற்கு செல்வதை குதிரை கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. இன்று கடல் கடந்தும், கண்டம் விட்டு கண்டம் செல்வதும் சகஜமாகி விட்டது. காலை உணவு இந்தியாவில் என்றால், மதியம் மலேசியாவிலும், இரவு உணவு இந்தோனேஷியாவில் என்றும் றெக்கை இல்லாத பறவைகளாக பலர் பறந்து கொண்டு இருக்கிறார்கள்.

வெளிநாடு செல்லும் எண்ணம் யாருக்கு வரும்?

பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் (ஆட்சி, உச்சம், திக் பலம் போன்ற அமைப்பில் இருந்தால்) தாய்நாடு மீது பாசம் அதிகமாக இருக்கும். தாயையும், தாய்நாட்டையும் விட்டு பிரிந்து செல்லும் எண்ணம் துளியும் வராது என்று அடித்து சொல்லலாம். அதுவே ஜாதகத்தில் குரு கெட்டிருந்தால் (வக்கிரமாகி இருந்தாலும்) வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கும். மேற்கத்திய கலாசாரத்தை உயர்த்தி பேசுவார். வெளிநாடு செல்ல வேண்டும். அங்கேயே செட்டிலாக வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம். ஜாதகத்தில் குரு கெட்டிருப்பவர்களுக்கே வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளிலும் இறங்குவார்.

வெளிநாடு செல்லும் யோகம் எப்போது கைகூடும்?

நவக்கிரகங்களில் நீரை குறிக்கும் கிரகம் சந்திரன். 12 ராசிகளில் கடகம், விருச்சிகம், மீனம் நீர் ராசிகள் (ஜல ராசிகள்) என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசா நடைபெற்றாலோ அல்லது 8, 12-ம் இடங்களில் உள்ள கிரகங்களின் தசா புத்திகள் நடந்தாலோ கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். லக்னத்திற்கு 8, 12-ம் இடங்கள் சுபத்துவமாகி குறிப்பாக குரு, சுக்கிர பார்வை, தொடர்பு கிடைத்து அந்த 8, 12-ம் இடங்களில் அமர்ந்த கிரகங்களின் தசா, புத்திகளிலும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குறிப்பாக 12-ம் இடத்துடன் ராகு தொடர்பு கொண்டிருந்தால் ராகு தசா, புத்தியில் வெளிநாடு செல்லும் அமைப்பு ஏற்படும்.

சுற்றிப்பார்க்கவா? சம்பாதிக்கவா?

வெளிநாடு செல்பவர்கள் எதற்காக பயணம் மேற்கொள்வார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்ப்போம்.

8, 12-ம் இடங்கள் சுபத்துவமாகி அந்த வீட்டில் அமர்ந்த கிரகங்களின் தசா, புத்தியில் வெளிநாடு செல்லும் அமைப்பு ஏற்படும் என்று சொல்லியிருந்தேன். அப்படி 8, 12-ம் இடங்களுடன் 5-ம் இடம் தொடர்பு கொண்டால் சுற்றிப்பார்க்க வெளிநாடு செல்வார். சுக்கிரன் தொடர்பு கொண்டால் இன்ப சுற்றுலா செல்பவராக இருப்பார். 6-ம் இடம் தொடர்பு கொண்டால் வேலைக்காக வெளிநாடு செல்வார். 10-ம் இடம் தொடர்பு கொண்டால் தொழில் ரீதியாக வெளிநாடு செல்வார் என்று கூறலாம்.

கிரீன் கார்டு யாருக்கு கிடைக்கும்?

அமெரிக்கா செல்லும் பெரும்பாலானவர்களின் கேள்வி "கிரீன் கார்டு கிடைக்குமா?. அங்கேயே செட்டிலாகி விடுவேனா?" என்பதுதான். ஜாதகத்தில் 8, 12-ம் இடங்களின் தொடர்பு பெற்ற கிரகத்தின் தசா, புத்தி நடந்தால் ஒருவர் வெளிநாடு செல்வார். அந்த தசா, புத்தி குறுகிய காலமாக இருந்தால் வெளிநாடு சென்றவர் மீண்டும் தாய்நாடு வருவார். 8, 12-ம் இடங்களில் உள்ள கிரகத்தின் தசா நீண்ட காலமாக இருந்தால் அவர் தாய்நாடு திரும்புவது சந்தேகம்தான்.

உதாரணமாக: ஒருவருக்கு 8, 12-ம் இடங்களுடன் தொடர்பு பெற்று ராகு தசா நடைபெற உள்ளதாக வைத்துக்கொள்வோம். ராகு தசா மொத்தம் 18 ஆண்டுகாலம் என்பதால், ராகு தசா முடியும் வரை அந்த ஜாதகர் வெளிநாட்டிலேயே இருப்பார், தாய்நாடு பக்கமே திரும்பமாட்டார் என்று சொல்லலாம். அடுத்து வரக்கூடிய குரு தசாவில்தான் அந்த ஜாதகர் தாய்நாடு திரும்புவார். ஒருவேளை குருவும் 8, 12-ம் இடங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால், குரு தசா முடியும் வரையிலும் (16 ஆண்டுகள்) அந்த ஜாதகர் வெளிநாட்டிலேயே இருப்பார் என்று சொல்லலாம். அடுத்தடுத்து வரக்கூடிய தசா புத்திகளை கொண்டு அந்த ஜாதகருக்கு கிரீன் கார்டு கிடைக்கும் என்று சொல்லலாம்.

கட்டுரையாளர்: ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர், astrovenkataeswar@gmail.com, 91590 13118

பொறுப்புத் துறப்பு: இது ஜோதிட நிபுணரான கட்டுரையாளரால் வழங்கப்பட்ட தகவல். இதன் உண்மை தன்மைகளுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது. ஜோதிட நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பெறுவது உங்களின் சுய விருப்பத்தை பொருத்ததாகும்.