தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: இங்குள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்

HT Temple SPL: இங்குள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்

Manigandan K T HT Tamil
Nov 21, 2023 05:45 AM IST

இத்தலத்தில், சண்முகர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான்,ஜெயந்திநாதர் என நான்கு உற்சவர்கள் இருக்கிறார்கள். இதில் குமாரவிடங்கரை, மாப்பிள்ளை சாமி என அழைப்பர்.

குழந்தை பாக்கியத்துக்காக தொட்டில் கட்டிய பக்தர்கள்
குழந்தை பாக்கியத்துக்காக தொட்டில் கட்டிய பக்தர்கள்

13ந்தேதியன்றே,பக்தர்கள் சஷ்டி விரதத்தைத் தொடங்கிவிட்டனர். ஆலயத்தில், யாக சாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வாஜனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஸனஹோம பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை நிகழ்வுகள் இனிதே நடந்து வருகின்றது.

அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கி விமரிசையாக நடந்தது. ஆனாலும், திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் என்பது மிக மிக விமரிசையானது.மற்ற ஆலயங்களுக்கும்,இதற்கும் பல்வேறு வித்யாசம் உண்டு,அவற்றை இங்கு விளக்கமாகக் காண்போம்.

திருச்செந்தூர் ஆலய, ராஜ கோபுரம், ஆண்டு முழுதும் மூடப்பட்டிருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், தேவி தெய்வானைத் திருமண நாளில் மட்டுமே திறக்கப்படும். இவ்வாலய பூஜைகளில் நிர்மால்ய பூஜை எனப்படும், விஸ்வ ரூப தரிசனம் மிகவும் சிறப்பானதும், முக்கியமானதுமாகும் என்கிறார்கள். உச்சிக் காலை பூஜைக்கு முன்பு, இலையில் சோறிட்டு, நெய், மோர்க்குழம்பு, பருப்புப் பொடி, தயிரிட்டு, தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவர் போற்றிகளுக்கான பூஜையைத் தொடங்குவது மரபாக உள்ளது.

இத்தலத்தில், சண்முகர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான்,ஜெயந்திநாதர் என நான்கு உற்சவர்கள் இருக்கிறார்கள். இதில் குமாரவிடங்கரை, மாப்பிள்ளை சாமி என அழைப்பர். இத்தல, உட்பிரகாரத்தில் ஆலய தல வரலாறு வரை படங்களும், வெளிப் பிரகாரத்தில், தூண்களில், சஷ்டி கவசம் காணலாம். 2 வது படை வீடான இக்கோவில் அறுபடை வீடுகளில் மிகப் பெரிய ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் மணி , 100 கிலோ எடையுள்ளது. பிரம்மாண்டமான இந்த மணி, தற்போது ராஜ கோபுரத்தின் 9 ம் அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு உச்சி கால பூஜைகள் முடிந்ததும், ஒலிக்கப்படும் மணியோசைக்கு பின்பே, வீரபாண்டிய கட்ட பொம்மன் உணவருந்தச் செல்வாராம்.

17ம் நூற்றாண்டில் கட்டப் பட்ட இவ்வாலய கோபுரம், 157 அடி உயரமும், ஒன்பது அடுக்குகள் கொண்டும் இருக்கிறது.ஆலயத்தின் கொடி மரத்திலிருந்து வலது பக்கமாக எல்லா சன்னதிகளுக்கும் சென்று வந்தால், அந்த சுற்றுபாதை ஓம் வடிவில் அமைந்து இருப்பது அற்புதம்.

இங்கு பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் தருவர். இது முருகப் பெருமானின் பன்னிரு கரங்களிலுள்ள 12 நரம்புகளைக் குறிக்கும், அதாவது முருகரே வந்து பிரசாதம் தருகிறார் என்று ஐதீகம். மூலவர் தவக்கோலம் கொண்டிருப்பதால், காரம், புளி பிரசாரத்தில் சேர்ப்பது இல்லை. இரவு பூஜையில் சுக்கு,வெந்நீர்,பால் இடம் பெறும்.மூலவர் சுப்ரமண்யருக்கு வெள்ளை ஆடை, சண்முகருக்கு பச்சை நிற ஆடை அணிவிப்பர்.

இவ்வாலயத்தில்,குமார ஆகமம்,மற்றும் சிவாகமம் ஆகிய 2 விதங்களில் பூஜை நடக்கின்றது. சுப்பிரமண்ய சுவாமி கிழக்குப் பார்த்தும், சண்முகர் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகன் தாமரை மலர்கள் கொண்டு சிவ பூஜை செய்து வழிபட்டதை நினைவுபடுத்த ,மூலவர் வலது கையில் ஒரு தாமரை மலர் காணப்படும்.

இங்கு மூலவருக்குப் பின் புறம் பாம்பறை எனும் அறை உள்ளது.முருகர் பூஜித்த பஞ்ச லிங்கங்கள் அங்குதான் இருக்கின்றன. இங்கு,உச்சி கால பூஜை முடிந்ததும்,பால்சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு,மேள,தாளங்கள் முழங்க,கடலுக்கு சென்று அதைக் கரைப்பார்கள்.

இதை "கங்கா பூஜை"என குறிப்பிடுகிறார்கள். வீரபாகு தேவர் இங்கு காவல் தெய்வமாக இருக்கிறார்.ஆகவே இவ்வூரை வீரபாகுப் பட்டி எனவும் அழைப்பர். மன்னார் வளைகுடா கரை ஓரத்தில்,அலைகள் தவழ அமைந்திருப்பதால் இதை அலைவாய் என்பர். திரு எனும் அடைமொழி சேர்த்து திருச்சீரலை வாய் என்பர்‌.

அருள்மிகு முருகரின் அவதார நோக்கமே, அசுரர்களை சம்ஹாரம் செய்வதுதான். மாய வித்தைகளைக் கையாண்டும், மறைந்திருந்தும், போர்புரிந்த அசுரர்களை எதிர்த்துத் 

திருப்பரங்குன்றத்தில்-நிலம்,

திருச்செந்தூரில்-கடல்

திருப்பேரூர்-விண்

ஆகிய மூன்றிலும் போரிட்டு வென்றார். 

இதில் அவதார நோக்கம் பூர்த்தியானது செந்தூரில். எனவே இது தெய்வீகச் சிறப்பும்,தனித்துவம் கொண்டும் இருக்கிறது. இத்தல இறைவனே ஞானத்தை அருளி,தீய சக்திகளிடமிருந்து நம்மை காப்பாற்றுபவர் என்பர்.

கந்த சஷ்டி கவசத்தில் வரும் "சமரா புரி வாழ் சண்முகத்தரசே..." எனும் வரிகள்,விண்ணில் நின்று போரிட்ட,திருப்போரூரைக் குறிக்கின்றது.அருணகிரி நாதர், "திருச்செந்தூர் முருகனே போற்றி" எனும் தலைப்பில் 83 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். பாவங்கள் நீங்க, இதைப் பக்தி சிரத்தையுடன் பாட வேண்டும் என்பர்.

ஆறுமுகப் பெருமானுடைய திருநாமங்களில் மிகவும் சிறந்தது "முருகா" எனும் நாமம்‌முருகு என இதனைக் கொள்ள வேண்டும். தமிழில்,வல்லினம்,மெல்லினம்,இடையினம் என்ற 3 இனங்களிலிருந்து ஒர் எழுத்து வீதம் சேர்ந்து பின் முருகு என்றானது‌

"மொழிக்கு துணை முருகா எனும் நாமம்" என்பார் அருணகிரிநாதர்.

முக்காலங்களிலும்,மூவுலகங்களிலும், முப்போதும், மும்மையிலும் ஆன்மாக்களைக் காக்கின்ற திரு மந்திரம் " முருகா " என்று நக்கீரரும் நவின்றுள்ளார்.

போர் களத்தில் வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, கவசம் அணிவர்‌. அதேபோல கந்த சஷ்டி கவசம் என்பது நம்மைப் பெரும் தீமைகள், துன்பங்கள், ஆபத்துகளில் இருந்து காக்கும் கவசமே. கவசம் என்றாலே நம்மைக் காக்கும் அணிகலன்களை குறிக்கும். தீவிர முருக பக்தரான, ஸ்ரீ தேவநாய சுவாமி அவர்கள், இதைத் தினந்தோறும் பாராயணம் செய்ய வல்வினைகள் விலகி ஓடும் என்பார். முருகன் 6ம் இடத்து தோஷங்களை போக்கும் வல்லமை உள்ளவர். 6 முகங்கள், சரவணபவ எனும் 6 அட்சரங்களைக் கொண்டு 6 படைவீடுகள் கொண்டவர், 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் இவர்.

திருச்செத்தூர் ஆலய இடது பக்கத்தில் வள்ளிக் குகை எனும் இடமுள்ளது. இங்குள்ள சந்தனமலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்யம் நிச்சயம் என்பர். 

இவ்வாலயம் செல்லும் வழியில் உள்ள துண்டுகை விநாயகர் கோயில் பிள்ளையாரை வணங்கிய பின்னரே முருகப் பெருமானை வணங்கச் செல்வர்.

சூரபத்மனுக்குச் சிவன், அவன் கேட்ட,கேளாத எண்ணிலா வரங்களை அருளியிருந்தார்.கம்சன், துரியோதனன்,இரண்யன் போன்றவர்களைப் போன்றவனில்லை இவன், தீய குணங்களற்றவன். தன் குலத்தை அழித்தொழிக்க முற்பட்ட,அமரரைச் சிறைப்படுத்தி,வாட்டி வருந்தியது, அளவுக்கு மீறிப் போய் விட்டதால், அது ஒரு பெருங் குற்றமானது. வரங்கொடுத்த, சிவனின் குமாரனை எதிர்த்து சமராட வந்து, அதுவும் வீரபாகு சென்று அரிய பெரிய உபதேச அறிவுரைகளைக் கூறியும், போரிட வந்தது நன்றி மறந்த செயல் எனவும் ஆகவே அவன் துஷ்டன் என அருணகிரியார் கூறுவார்.

இறுதிக் கட்டத்தில் சூரபத்மன்

"சூராதி யுவணரை அழித்த சுப்ரமண்யக் கடவுளே,

மாதர் மயக்கறுத்து,

அடியேன், முக்தி பெற,

அருள் புரிவீர்" என்றே சரணடைய, முருகன் அவனை ஆட்கொண்டார். 

முருகரின் வெற்றிவேல், மாமரமாக மாறிநின்ற, சூரபத்மனைப் பிளவுபடுத்திய இடம், செந்தூரில் இருந்து 3 கி.மீ தூரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள, மாப்பாடு என்கிற இடமாகும். இதை மக்கள், மணப்பாடு என்பார்கள்.

முருகவேள் புகழினை வசிஷ்ட மாமுனிவரும்,

காசிபரும், அகத்திய மாமுனிவரும், இடைக்காடர், நக்கீரரும் பாடித் துதித்து உள்ளனர். இவற்றில் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை மட்டுமே கிடைத்திருக்கிறது. மற்ற முனிவர்களின் பாடல்கள் அருணகிரியார் காலத்தில் இருந்தன. இப்போது காணக் கிடைக்கவில்லை.

"வசிட்டர் காசிபர் தவத்தான

யோகியர்

அகத்திய மாமுனி இடைக்காடர் வீரனும்

வகுத்த பாவினில்

பொருட்களையும் வரு

முருகோனே"

----திருப்புகழ்-----

எல்லாம் வல்ல முருகன் திருவடியை வணங்கி, அவனருள் பெற

"காக்க காக்க

கனகவேல் காக்க"

என்று மனமாற பிரார்த்தனை செய்வோம்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

WhatsApp channel

டாபிக்ஸ்