HT Temple SPL: தீராத நோய்களுக்கும் இந்தக் கோயிலில் இருக்கு மருந்து!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: தீராத நோய்களுக்கும் இந்தக் கோயிலில் இருக்கு மருந்து!

HT Temple SPL: தீராத நோய்களுக்கும் இந்தக் கோயிலில் இருக்கு மருந்து!

Manigandan K T HT Tamil
Published Mar 01, 2024 06:15 AM IST

சம்பாதி சடாயு என்ற இரண்டு பறவைகள் (புள்), ரிக் வேதமும், முருக கடவுளும், சூரியனும் இறைவனை பூஜித்துள்ளதால் இத்தலத்திற்கு புள் + ரிக்கு+ வேல்+ ஊர் இணைந்து "புள்ளிருக்கு வேளூர்" எனும் தொன்மைப் பெயரையும் கொண்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில் (@trramesh)

இது போன்ற போட்டோக்கள்

சம்பாதி சடாயு என்ற இரண்டு பறவைகள் (புள்), ரிக் வேதமும், முருக கடவுளும், சூரியனும் இறைவனை பூஜித்துள்ளதால் இத்தலத்திற்கு புள் + ரிக்கு+ வேல்+ ஊர் இணைந்து "புள்ளிருக்கு வேளூர்" எனும் தொன்மைப் பெயரையும் கொண்டுள்ளது.

செவ்வாய் பகவான், இங்கு மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட பெரும் வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு. மூலவரோடு உற்சவருமான அங்காரஹமூர்த்தி செவ்வாய்க்கிழமைகளில் ஆடு வாகனத்தில் எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால், பக்தர்கள் பெருமளவு, இங்கு வருகின்றனர். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், திருமணம் தடைப்படும். அது மட்டுமின்றி, பல்வேறு வகையான, இடையூர்களும், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும்.

இத்தலத்தில் உள்ள இறைவன், வைத்தியநாதரையும், இறைவி தையல்நாயகியையும் வேண்டித் தொழ, எல்லா வகை வியாதிகளும் தீரும் என்பதும், இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்ண, எல்லா வகை நோய்களும் கட்டுப்படும் என்று கூறுவார்கள். இதைத்தவிர, செவ்வாய்க்கு, அதிபதியான முருகன், இங்கு, முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரிகிறார். செவ்வாய்க்கிழமை வந்து, அங்காரகன் எனப்படும், செவ்வாய் சன்னதியில் பிரார்த்தனை செய்து, முருகனையும் வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை, பூசம் போன்ற தினங்களில், முத்துக்குமாரசுவாமிக்கு விசேஷ பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியவை நடைபெறும். அர்த்த ஜாம பூஜைகள், முத்துக்குமாரசாமிக்கு வழிபாடு நடந்த பிறகே, இறைவனுக்கு வழிபாடு நடக்கும்‌. கோவிலின் தெற்கு பிரகாரத்தில் "ஜடாயு குண்டம்" என்ற இடம் உள்ளது,

ஜடாயு சண்டையிட்டு மாண்ட ஊரிது, அவருக்கு, இராமலக்ஷ்மன் இறுதிச் சடங்குகள் செய்தனர் என்கிறது புராணங்கள். ஜடாயு குண்டத்து சாம்பலை, இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

ஆலயத்தில் பத்ரகாளியம்மன் சன்னதி, அன்னபூரணி, தக்ஷிணாமூர்த்தி, கஜலட்சுமி, அஷ்டலட்சுமி, நடராஜர், துர்கை, சன்னதிகளும், நடராஜர் சபையில், சிவகாமியுடன், மாணிக்க வாசகர், காரைக்கால் அம்மையார் உள்ளனர்.

ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள், அமராவதி, கைலாசநாதர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விஸ்வநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், அழகிய சகஸ்ர லிங்கமும் வரிசையாக உள்ளன.

சிறிய, சிவலிங்கத் திரு மேனியுடன், மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி தீராத நோய்களையும் தீர்க்கும், வைத்தியநாத பெருமாளை கண்டு வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம். அருணகிரிநாதர், இத்தல முருகனின் பெருமைகளையும் மகிமைகளையும் மிக அழகாகப் பாடியுள்ளார். இறைவன், இறைவி, முருகன் ஆகிய மும்மூர்த்திகளும் இத்தலத்தில் சிறப்புடையவை.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்