HT Temple SPL: காய்ச்சலை குணமாக்கும் ஜுரஹரேஸ்வரர்!-இந்தக் கோயில் எங்கு இருக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: காய்ச்சலை குணமாக்கும் ஜுரஹரேஸ்வரர்!-இந்தக் கோயில் எங்கு இருக்கு தெரியுமா?

HT Temple SPL: காய்ச்சலை குணமாக்கும் ஜுரஹரேஸ்வரர்!-இந்தக் கோயில் எங்கு இருக்கு தெரியுமா?

Manigandan K T HT Tamil
Feb 29, 2024 06:00 AM IST

'சுரன் எனும் அரக்கனை அழித்துவிட்டு, லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறேன், அங்கு ஜுரஹரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருளும் என்னை வழிபட,உங்களுடைய வெப்பம் தணியும் என்று கூறினார் சிவபெருமான்'

ஶ்ரீ ஜுரகரேஸ்வரர் ஆலயம்
ஶ்ரீ ஜுரகரேஸ்வரர் ஆலயம் (@TheSaveTemples)

நியாயம்- வைசேடிகம், சாங்கியம் -யோகம், மீமாம்சை -வேதாந்தம் என வேத தரிசனங்களின் இடையிலான ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, பெரும் ரிஷிகள், அவற்றை பிரித்து, ஒருமுகப்படுத்தி, இவற்றுக்குரிய சூத்திர நூல்கள் இயற்றியுள்ளது எல்லாமே, நமது அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் தோன்றுகிறது.

அப்படிப்பட்ட ஒரு ஆலயம் பற்றிய விஷயம் தெரிந்து கொள்வோம்.

சிவனுடைய சக்தியால் மட்டுமே, தனக்கு அழிவு வரவேண்டும், என்று வரம் பெற்றிருந்த, தாரகன் எனும் அசுரன் ,தேவர்களை துன்புறுத்தி, எந்நேரமும் வேதனைகளை அவர்களுக்கு தந்து, கஷ்டப்படுத்தி வந்தான். பொறுக்க முடியாத தேவர்களும், மற்றவர்களும் சிவபெருமானிடம் குறை தீர்க்க வேண்டினர்.

இந்த நேரத்தில், சிவபெருமான், ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால், அவருக்கு விஷயத்தை சொல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது‌. ஆகவே, மன்மதன் மூலம் , தேவர்கள் முயற்சி மேற்கொண்ட போது, அந்த முயற்சியில், மன்மதன் இறந்தான். பலன் கிடைக்கவில்லை. எனவே சிவனை, பல நாமங்களை சொல்லி, துதித்துக் கொண்டே இருந்தனர்.

சில காலங்களில், சிவபெருமானின், கருணைப் பார்வை கிடைத்தது. அவர், தனது நெற்றியிலிருந்து, சுடரை வெளிப்படுத்தி, அதை அக்னி தேவனிடம் கொடுக்க, அக்னி வயிற்றில், அந்த நெருப்பு தாக்கியபோது எல்லா தேவர்களும் ,அதன், உக்கிரகத்தை உணர்ந்திட, கடும் காய்ச்சல் போல உடல் நெருப்பாய் சுட்டது கண்டு, மீண்டும் நிவர்த்திக்கு ஈசனையே சரணடைந்தனர். "தாயும் ஆனவர் ஆயிற்றே அவர்"

அவர்களின் துன்பம் பொறுக்க மாட்டாது, சிவபெருமான், அவர்களை நோக்கி, பூலோகத்தில் காஞ்சி எனும் திருத்தலத்தில், சுரன் எனும் அரக்கனை அழித்துவிட்டு, லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறேன், அங்கு ஜுரஹரேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு அருளும் என்னை வழிபட,உங்களுடைய வெப்பம் தணியும் என்று அருள் கூற ,தேவர்கள் அனைவரும் ,அங்குவந்து வழிபட்டு, உடல் குளிர்ந்து நலம் பெற்றனர் காய்ச்சல் குறைந்து,குணம் பெற்றதால்,இத்தல இறைவன் ஜுரஹரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், காஞ்சி சங்கர மடத்தின் அருகில் இருக்கும் மிகப் பழமையானதொரு ஆலயம். "பிரணவாகார" விமானம் அமையப் பெற்றது. விமானத்தின் நான்கு புறமும், ஜன்னல்கள் அமைந்துள்ளன. மூலஸ்தானத்திலும் கருங்கல்லினாலான ஜன்னல்கள் உள்ளன, காரணம் இறைவன் இங்கு வெப்பம் மிகுந்தவர், அவரைக் குளிர்ச்சிப்படுத்த இவ்வாறான ஏற்பாடுகள் என்கின்றனர்.

காய்ச்சல் உள்ளவர்கள், இங்கு வந்து, வழிபடும்போது விமானத்தின் மேல் உள்ள ஜன்னல்களின் வழியாக வரும் காற்று, வெளிச்சம் இவைகள் நோயை குணமாக்குவதாக ஐதீகம். "போற்றுகிறேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின்றேன், அறை ஓர் சிவயோகத்தை ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே" என்கிறது சைவ நெறி நூல்களுக்கு சமமாக விளங்கக்கூடிய தத்துவம் நிறைந்த திருமந்திரம்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்