தமிழ் செய்திகள்  /  Astrology  /  Ht Temple Special Sri Hirudhayaleeswarar Sivan Temple Is A Hindu Temple Located At Thirunindravur

HT Temple SPL: இதயம் தொடர்புடைய பிரச்சனைகள் சரியாக இருதயலீஸ்வரர் கோயில் செல்லுங்க!

Manigandan K T HT Tamil
Feb 13, 2024 03:04 PM IST

ஆலயம் கட்ட, பொருள்கள் தேடிப் போகும் பொழுது, எவ்வளவு முயன்றும், அவருக்கு வேண்டிய பொருட்கள், இறுதிவரை கிடைக்கவே இல்லை.

ஸ்ரீ இருதயலீஸ்வரர் சிவன் கோவில், திருநின்றவூரில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும்.
ஸ்ரீ இருதயலீஸ்வரர் சிவன் கோவில், திருநின்றவூரில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்(கு )அல்லால் பிறவாழி நீந்தல் அரிது" அதாவது அறக்கடலாக உள்ள பெரும் சான்றோன் இறைவன் ,அடியொற்றி நடப்பவர்க்கு, ஏனைய பொருளும், இன்பம் ஆகிய கடல்களை எளிதாக கடந்து செல்வர். எனவும் கூறுவார் வள்ளுவர். இவ்விரண்டு, குறளுக்கும் சான்றாக நிற்பவரே பூசலார் நாயனார் அவர்கள்.

திருநின்றவூர் எனும் திருத்தலத்தில், வாழ்ந்த வேதம், நீதிநூல் முதலிய கலைகளைக் கற்று உணர்ந்தவரும், சிவனுக்கும் சிவன் அடியார்களுக்கும் பணி செய்வதே, மனித பிறவி எடுத்த, தன் கடமை என்று, நினைத்தவரும், எங்கும், எவ்வகையிலும் பொருளைத் தேடி, சிவன் அடியவருக்கு கொடுத்து மகிழ்ந்தவர். சிவபெருமான் எழுந்தருள திருக்கோயில் ஒன்றமைக்க எண்ணினார்.

ஆலயம் கட்ட, பொருள்கள் தேடிப் போகும் பொழுது, எவ்வளவு முயன்றும், அவருக்கு வேண்டிய பொருட்கள், இறுதிவரை கிடைக்கவே இல்லை. அதனால், முடிவில், பெருமானுக்கு, தன் மனத்தினாலேயே ,ஒரு திருக்கோவில் கட்ட துணிந்தார். அதற்கு வேண்டிய, திரவியங்களை, தமது கற்பனையாலே சிறுது சிறிதாக தேடி, தம் மனதில் சேர்த்துக் கொண்டார். ஊன்,உறக்கமின்றி தீவிரமாக கோயில் கட்டுவதற்கு, அனைத்து ஏற்பாடுகளையும், சரிவர செய்தபின், சிற்ப வேலைப்பாடுகள், விமானம், ஸ்தூபி, கிணறு, திருக்குளம் எல்லாம் அன்பின் நிறைவினாலே அமைத்தார்.

மனதால் கட்டிய திருக்கோயிலில், சிவபெருமானை ஸ்தாபிக்க நல்ல ஒரு நாளையும் நல்ல வேளையையும் குறித்தார். அதே நேரத்தில், காடவர்கோன் பல்லவ அரசன், காஞ்சிபுரத்தில், பெரிய கற்கோயில் கட்டி எழுப்பி,சிவனை ஸ்தாபிக்க இதே நாளை தேர்ந்தெடுத்தான்.

அரசன் கனவில் சிவபெருமான் தோன்றி, திருநின்றஊரில், பூசல் எனும் அன்பன் ஒருவன், நீண்ட நாட்களாக, நினைத்து நினைத்து, எழுப்பிய, நல்லதோர் ஆலயத்தில் யாம் புக இருக்கிறோம், ஆகவே நீ இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளவும் என்பதை சொன்னதும், அரசன் திடுக்கிட்டு, இது உண்மையா என்று அறிய, மெய்யன்பரை, நான் காண வேண்டும் என்று, தனது பரிவாரங்களுடன், இங்கு வந்து சேர்ந்தான்.

அரசன் வந்து அங்குள்ளவர்களை அழைத்து, பூசலார் கட்டிய ஆலயம் எது என்று கேட்க, பூசலார் என்பவர் இருக்கிறார், ஆனால் அவர் ஆலயம் எதுவும் கட்டவில்லை என்று சொல்ல, பூசலாரை தான் காண வேண்டும் என்று அரசன் கூற, அவரும் நேரடியாக வர, அவரிடம், அவர் கட்டிய அகக்கோயில் பற்றித் தெரிந்து கொண்டு, அவரைப் போற்றி தரை மீது விழுந்து, நாயனாரை, தொழுது வணங்கி, அவர் வேண்டிக் கொண்டபடி, அவருக்காக ஒரு கோயிலும் பெரிய அளவில் கட்டி கொடுத்தான்.

இப்படி பூசலாரை சம்பந்தப்படுத்தி அமைந்த ஆலயமிது என்பர். இதய சம்பந்தமான வியாதிகள், பிரச்சனைகளைத் தீர்க்கும் வேண்டுதல் மற்றும் பரிகார தலமிது என்கின்றனர். இங்கு இதய நோய் தீர்க்கும் மருத்துவர்களும் வருகிறார்கள் என்பர். வேண்டுதல் பயன் தரும் எனும் தளராத நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு.

இப்படி பூசலார் சம்பந்தப்பட்ட ஒரு கோயில் என்று இதை சொல்லுகிறார்கள். தனக்குள்ளே இறைவனை தேடினார் பூசலார், இது பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட செய்தது, ஸ்ரீ ரமண மகரிஷியின் வார்த்தைகளில், பக்தி அல்லது பக்தியின் மிகப்பெரிய பரிணாமமிது என்பர்.

தமிழ்நாடு, திருவள்ளூர் அருகில், ஆவடி பக்கத்தில், உள்ள திருநின்றவூரில் உள்ள மரகதாம்பிகை உடனுறை அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோயில் புராதானமான ,7ம் நூற்றாண்டு,பெரிய புராணம் புகழும் பாடல் பெற்ற திருத்தலம்.

இலுப்பை மரத்தை தல விருட்சமாக கொண்ட இந்த ஆலயத்தில், சுவாமி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனித்தனி சன்னதிகள் உள்ளது. சுவாமி விமானம் கஜபிஷ்டம் அமைப்பில், தூங்கானை மாடவடிவில் உள்ளது. லிங்கத்தின் மேனி அருகில் பூசலார் காட்சியும் உண்டு‌.

இங்கு, அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆலய சுற்று பிரகாரத்தில், விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் போன்ற பல தெய்வ தரிசனமும் காண மனம் மகிழும்.

கருவறையில் மேற்கூரையில், நான்கு பிரிவுரிவுகளுடன், இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில், இதய நோயால் துன்பப்படுபவர்கள், இறைவனை, மனமுருக வேண்டி, பிரார்த்தனை செலுத்த, அந்த நோய்களிலிருந்து விடுபடுவர் என்பது ஐதீகம்.

இவ்வாலயத்தின் நற்பணிகளுக்கு பொருள் உதவி செய்தும்,பிறவகை திருத்தொண்டுகள் செய்தும்,இதை செவ்வனே பராமரித்து ,எம்பெருமான் சிவனாரின் அருளைப் பெற விழைவது நமது கடமை.

"சிவனின் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாளே அவன் தாள் வணங்கிச் சிந்தை

மகிழச் சிவபுராணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பன்யான்"

---திருவாசகம்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்