HT Tamil Exclusive : தீயாய் பாடும் திருப்புகழ் தியா.. ஆன்மீக மேடைகளில் கலக்கும் சுட்டி.. குட்டி கே.பி.எஸ் வளர்ந்த கதை!
குட்டி கேபிஎஸ் என அழைக்கப்படும் தியா, இங்கிலாந்தில் இருந்து குளோபல் புக் ஆப் எக்ஸலன்ஸ் என்ற அவார்டுக்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழிசை கலையரசி, பக்தி இளவரசி, இறையருட்செல்வி, இசைக்குயில், என பல பெயர்களில் அடையாளம் காணப்படும் தியா இதுவரை சுமார் 75 மேடைகளை அலங்கரித்துள்ளார்.

HT Tamil Exclusive: மாமதுரை மண்ணில் வைகாசி விசாக நாளில், தனது 5 வயதில் மழலை குரலில் நீயல்லால் தெய்வமில்லை.. எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.. என்ற சீர்காழி கோவிந்தராஜனின் புகழ் பெற்ற பாடலை பாட ஆரம்பித்தபோது அந்த பிஞ்சு குழந்தையின் குடும்பத்தினர் உள்ளிட்ட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அந்த மழலை குரல் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சபை ஏறும் என்று. ஆம் தமிழகத்தின் பல ஆன்மீக மேடைகளை தனதாக்கி பேச்சாலும், பாடல்களாலும் பலரின் இதயங்களை கட்டி போட்டு வைத்துள்ளார் குட்டி கேபிஎஸ் என்று அன்போடு அழைக்கப்படும் 7 வயது சிறுமி தியா.
ஆன்மீக பாடல்களோடு சொற்பொழிவும்
குழந்தையாக அங்கும் இங்கும் ஓடும் தியா.. மேடை ஏறியவுடன் தனக்கு எதிரில் இருப்பவர்களை தனது கம்பீரம் குறையாத குரலால் அசர வைக்கிறார். குரல் மட்டுமா.. குழந்தை தியாவின் ரியாக்சன் ஒவ்வொன்றும் நம்மை ரசிக்க வைக்கும். ஆரம்பத்தில் தனது குரலால் கலக்கிய தியா.. நாட்கள் செல்ல செல்ல தனது மேடைகளில் திருப்புகழ், அநுபூதி, தேவாரம், திருவாசம் என பாடல்களோடு, சின்ன சின்ன சொற்பொழிவுகளையும் சேர்த்து தன்னை தானே புடம் போட்டு வருகிறார். தியா அம்மன் பாடல்கள், ஐயப்பன் பாடல்கள் என எல்லா தெய்வங்களின் பாடல்களை பாடினாலும், தனது இஷ்ட தெய்வமான முருகன் பாடல்களை பாடுவதில் அலாதி ஆர்வம் காட்டுகிறார். தியாவின் முக பாவனைகள் காண்பவர்களை கட்டி வைக்கிறது.
குழந்தை தியா குறித்து அவரது தாயிடம் பேசியபோது, "எங்கள் வீட்டில் எல்லாருக்கும் இசை கேட்பது பிடிக்கும். தியா சிறு குழந்தையாக இருந்த போதே எனது அம்மா அவளுக்கு சின்ன சின்ன ஸ்லோகங்கள், பாடல்களை சொல்லி கொடுத்தார். நாட்கள் செல்லச் செல்ல அவள் எளிதாக பாடல்களை தானாகவே பாடினாள். அப்படிதான் மதுரையில் வைகாசி விசாக நாளில் பூங்கா முருகன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் சீர்காழி கோவிந்த ராஜன் ஐயாவின் நீயல்லால் தெய்வமில்லை பாடலை பாடினாள். அங்கு இருந்தவர்கள் இவளின் பாடலை விரும்பி ரசித்தனர். ஆனால் அந்த சின்ன வயதில் தியாவுக்கு மேடை, மைக் என எது குறித்தும் அச்சம் இல்லை. அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது. அவளுக்கு மேடையில் பாடுவதும், மற்றவர்களின் கைதட்டல்கள், பாராட்டுகளை பெறுவதும் மிகவும் பிடிக்கிறது என்று.
அதைத்தொடர்ந்து தற்போது நாங்கள் தொடர்ச்சியாக அவளுக்கான பாதையை அமைக்க உடன் நிற்கிறோம். குடும்பத்தில் எல்லோரும் அவளுக்காக குரலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை மட்டும் தவிர்த்து இருக்கிறோம். கச்சேரியில் மட்டும் இல்லை படிப்பிலும் அவள் கெட்டிதான். படிப்பு, பாட்டு என இரண்டையும் அவள் சிறப்பாகவே கையாளுகிறாள். மற்றபடி தியாவிடம் அவள் வயதிற்கே உரிய எல்லா குறும்புகளும் இருக்கிறது. ஆனால் மேடைக்கு சென்றால் அவளே அவளை பண்பட்டவளாக மாற்றி கொள்கிறாள். அது இறைவன் அருள் என்றே நாங்கள் கருதுகிறோம்" என தனது மகள் குறித்து பெருமிதத்துடன் கூறுகிறார்.
7 வயதில் 75 கச்சேரிகள்
குட்டி கேபிஎஸ் என அன்பாக அழைக்கப்படும் தியா, இங்கிலாந்தில் இருந்து குளோபல் புக் ஆப் எக்ஸலன்ஸ் என்ற அவார்டுக்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏழிசை கலையரசி, பக்தி இளவரசி, இறையருட்செல்வி, இசைக்குயில், என பல பெயர்களில் அடையாளம் காணப்படும் தியா இதுவரை சுமார் 75 மேடைகளை அலங்கரித்துள்ளார். இசையின் உச்சமாக பார்க்கப்படும் இசைஞானி இளையராஜா தொடங்கி ஆன்மீக சொற்பொழிவாளர்கள் சுகி சிவம், தேச மங்கையற்கரசி உள்ளிட்ட பலரும் வாழ்த்தி உள்ளனர். 3 தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் பொங்கல் விழாவில் பாடியதை தொடர்ந்து மேடையில் கௌரவப்படுத்தப்பட்ட தியாவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதுபோல இன்னும் பல மேடைகளில் பாடியும், பேசியும் அசத்த வாழ்த்துக்கள் தியா.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்