தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Of Vijayanarayanam Azhagiya Mannar Rajagopalaswamy Temple

அர்ஜுனனின் பாவம் நீக்கிய ராஜகோபால சுவாமி!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2022 06:15 PM IST

விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தலவரலாறு குறித்து இங்கே காண்போம்.

அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி
அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி

ட்ரெண்டிங் செய்திகள்

மகாபாரத புராணத்துடன் தொடர்புடைய வடக்கு விஜயநாராயணத்தில் முன்காலத்தில் வில்லுக்கு விஜயனான அர்ஜுனன் தனது பாவத்தை போக்குவதற்காகப் பூஜைகள் நடத்தியதாகவும், அப்போது நாராயணர் அவருக்கு திருகாட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விஜயநாராயணன் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி விஜயநாராயணம் ஆயிற்று என வரலாறு கூறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகத் திகழும் இக்கோயில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கோயிலின் கிழக்கு வாசலே பிரதான வாசலாக அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபாலசுவாமி சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடமும் உள்ளது. அதன் வலது புறம் உற்சவம் மண்டபம் அமைந்துள்ளது.

கோயில் திருவிழா காலங்களில் சுவாமிக்கு இங்கு வைத்தே திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. கோயிலின் உள்ளே மகா மண்டபம், ஆஸ்தான மண்டபம், சயன மண்டபங்கள் உள்ளன. இதனையடுத்து கோயிலின் உள்பகுதியில் அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி சன்னதி அமைந்துள்ளது.

கோயிலைச் சுற்றி வளம் வரப் பிரகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் ஆழ்வார்கள், பரிவார தெய்வங்களும் எழுந்தருளியுள்ளன. பழங்கால எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் ராஜகோபுரம் இல்லை அதற்குப் பதிலாக ராஜகோபால சுவாமி சன்னதியில் கோபுரம் உள்ளது.

கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் பத்தாம் நாள் அன்று திருத்தேரோட்டம், வைகுண்ட ஏகாதேசி விழாவும் பிரசித்தி பெற்றதாகும்.

பெருமைமிக்க இந்த கோயிலில் தேரடி சாஸ்தாவிற்குத் தனி சன்னதி கிடையாது. அவர் தேரிலேயே வீற்று இருப்பது தனி சிறப்பாகும். தேரோட்டத்தின் போது அவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்திய பிறகே திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

WhatsApp channel