Murugan Temple: அருள் மழை பொழியும் தவளகிரி தண்டாயுதபாணி!
முருகன் தண்டாயுதபாணி மேற்கு பார்த்தவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த குமாரபாளையம் குன்றின் மேல் அமைந்துள்ளது அருள்மிகு தவளகிரி தண்டாயுதபாணி திருக்கோயில். இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு துர்வாசகம் முனிவர் உருவம் இல்லாத சிலையாக மேற்கு பார்த்து பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
முருகன் தண்டாயுதபாணி மேற்கு பார்த்தவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பழனி முருகன் கையில் உள்ள சுண்டு விரலில் தர்ஜினி மோதிரம் அணிந்திருப்பது போன்று இக்கோயிலில் உள்ள முருகன் தர்ஷினி மோதிரம் வலது கையில் அடைந்திருப்பது சிறப்பாகும்.
இக்கோயில் கீழ் பகுதியில் வள்ளி, தெய்வானை கன்னிப் பெண்ணாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். வள்ளி, தெய்வானை ஆகிய இருவரின் சிலையானது முருகனை திருமணம் செய்து கொள்வதற்காக கிழக்கு நோக்கி தவம் இருந்தது போல் காட்சியளிக்கிறது. திருமண தடையை நீக்குவது, சூனியம், தொழில் விருத்தி, செவ்வாய் தோஷம், விரோதி நிவர்த்தி, வியாபார விருத்தி ஆகிய பரிகாரம் செய்ய உகந்த கோயிலாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 21 விளக்கு வைத்து பூஜைகள் செய்தால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை , சஷ்டி, ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. கந்த சஷ்டி அன்று ஆறு நாட்களில் ஆறு அவதாரங்களில் முருகன் காட்சி தருகிறார்.