விநாயகர் சதுர்த்தி: சுயம்பு பொய்யாமொழி விநாயகர்!
தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயில் தலவரலாறு குறத்து இங்கே காண்போம்.
திண்டிவனம் அருகே உள்ள தீவனூரில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற நெற்குத்தி விநாயகர் என்று அழைக்கப்படும் அருள்மிகு சுயம்பு ஸ்ரீ பொய்யாமொழி விநாயகர் கோயில்.
இக்கோயிலில் நுழைந்ததும் நீண்ட நெடிய கொடி மரமும் வலதுபுறம் நவகிரக சன்னதியும், அதனை அடுத்து மூலவர் லிங்க வடிவிலும் மூலவருக்கு வலது புறம் மகா ஜோதிர்லிங்க சுவாமி சன்னதியும் அமைந்துள்ளது.
கோயிலில் மூலவரைச் சுற்றியும் விஜய கணபதி, சக்தி கணபதி, பாலகணபதி உள்ளிட்ட பல்வேறு கணபதிகளும் காட்சி தருகின்றனர். துர்க்கை அம்மனும் தட்சிணாமூர்த்தி சுவாமியும், நாகேசுவரரும் பக்தர்களுக்கு தனித்தனியே காத்துத் தருகின்றனர்.
இக்கோயிலின் வடக்கே விழுதில்லா மூன்று ஆல மரங்களும் பிரம்மா, சிவன், விஷ்ணு கல்மரமாக அமைந்து விநாயக பெருமானை வந்து தரிசிக்கும் காட்சியாக இங்குக் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் சுயம்புலிங்க படிவ விநாயகருக்கு எருக்கம்பூ மாலை அணிவித்து வேண்டி வணங்கிய பின்பு மூன்று விழுதில்ல ஆலமரங்களை வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் திருமணத் தடை , கல்வி அறிவு ஆகிய பலன்களைப் பெறலாம்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். சங்கடஹர சதுர்த்தி பெருவிழா மற்றும் வருடத்திற்கு ஒருமுறை இருவார காலத்திற்கு இவ்வூர் மக்களின் சார்பாக இக்கோயில் திருவிழா நடத்தப்படுகின்றது.
இந்த கோயிலில் விநாயகர் லிங்க வடிவில் இருப்பதும் துதிக்கை அற்ற திருவுருவத்தைப் போலவே அருகில் உள்ள மூன்று ஆலமரங்களில் விழுதுகள் இல்லாமல் இருப்பதும் அதிசயம் நிறைந்ததாகவே உள்ளது.
ஒருமுறை மிளகு வியாபாரி ஒருவர் இக்கோயிலில் தங்கி ஓய்வெடுத்தாராம் அப்பொழுது கோயில் பணியாளர்கள் நெய் வேத்தியத்திற்காகச் சிறிது மிளகு கேட்டு உள்ளனர்.
அதற்கு அந்த வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு அவர் ஊரிலிருந்த சந்தைக்கு விற்பனை செய்யச் சென்றாராம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மிளகை அந்த மூட்டையிலிருந்து கொட்டிய போது மிளகுக்குப் பதில் உளுத்தம் பருப்பு கொட்டியதாம்.
அதிர்ந்து போன வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டாராம். மீண்டும் உளுந்து மிளகாக மாறியுள்ளது. அன்றிலிருந்து நெற்குத்தி சுவாமியின் பெயர் பொய்யா மொழி விநாயகர் என அழைக்கப்பட்டார். பிறர் பொருளை அபகரித்தவர்கள், ஏமாற்றுபவர்களை இங்கு அழைத்து வந்து விநாயகர் முன்பு சத்தியம் செய்யக் கூறுவது இன்று வரை நடைமுறையில் உள்ள சிறப்பம்சமாகும்.