பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் தலவரலாறு !
பிரம்மதேசம் கைலாசநாதர் பெரியநாயகி அம்மன் கோயில் தலவரலாறு குறித்து இங்கே காண்போம்.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வட மேற்கில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிரம்மதேசம் என்ற ஊர். இந்த ஊரின் நடுவில் அமைந்துள்ள கைலாசநாதர் சுவாமி கோயில் சிற்பக் கலைகளை உலகிற்கு பறைசாற்றும் விதமாக திகழ்கிறது.
பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர் இலந்தையடி நாதர் என்னும் சிவ சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து பூஜித்ததாகவும். அதனால் பிரம்மாவின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற பெயர் வழங்கப்பட்டதாகும் கூறப்படுகிறது.
இது தவிர தஞ்சையில் ஆட்ட ராஜ ராஜசோழன் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்தபோது, இந்த ஊரில் வீற்றிருக்கும் கைலாசநாதர் பிரஹந்நாயகி ஆகியோர் அருளால் வெற்றி பெற்றுள்ளார். அதில் மனம் மகிழ்ந்த மன்னன் இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்ததாகவும் வரலாறு கூறுகிறது.
நான் மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர் மானியமாக வழங்கியதால் ராஜராஜ சதுர்வேதிமங்கலம் அல்லது பிரம்மதாயம் என்று பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது பிரம்மதேசம் என்று விரிவடைந்ததாக கூறப்படுகிறது.
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கைலாசநாதர் கோயில் கம்பீரமாக திகழ்கிறது. ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய அறையை காணலாம்
கோயிலின் உள்ளே நுழைந்ததும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி சிலை, இதனை அடுத்துள்ளது பெரிய முகப்பு மண்டபம். மரத்தினால் செய்யப்பட்ட இந்த மண்டபத்தின் மேற்கூரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் கலை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவாதிரை மண்டபத்தை அடுத்து புனுகு நடராஜர் சன்னதி உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை அன்று மட்டும் தான் இவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து கருவறையில் மூலவராக கைலாசநாதர் சன்னதியும், பிரஹந்நாயகி அம்மன் சன்னதியும் உள்ளது.
இது தவிர முருகனுக்கு, சப்த மாதர்களுக்கு, வல்லவ கணபதிக்கு என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. ஆதி கைலாயங்களில் முதன்மையானதாகவும், தென் மாவட்ட நவகிரக ஸ்தலங்களில் சூரிய தலமாகவும், பஞ்ச பீட பழங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இந்த தலம்.
பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கைலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவ தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் இங்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.