அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் சிறப்புகள்!
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

நெல்லை மாவட்டம் களக்காடு பத்ம நேரி பச்சை ஆற்றின் கரையில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிவதலமான நெல்லையப்பர் கோயிலில் ஆடல் வல்லான் எம்பெருமான் ஈசன் நெல்லையப்பராகவும், பார்வதி தேவி காந்திமதி அம்பாளாகவும் திருமணக் கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவதலமாகவும், பச்சையாற்றின் கரையில் உள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் கோயில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கிழக்கு வாசலில் பிரதான வாசலாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் நெல்லையப்பர் சன்னதியும் அதன் அருகில் காந்திமதி அம்மாளின் சன்னதியும் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றன. நெல்லையப்பரை நோக்கியவாறு நந்தியம்பெருமான் காட்சி தருகின்றார். கோயிலுக்குள் நுழைந்ததும் மகா மண்டபம் அமைந்துள்ளது கோவிலின் முற்பகுதியில் சுவாமி அம்பாள் சன்னதிகள் அழகு பெற அமைந்துள்ளன.
கோயிலைச் சுற்றி வலம் வர உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, கன்னி விநாயகர், ஆறுமுக கடவுளான முருகப்பெருமான், சண்டிகேசுவரர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளும் அமைந்துள்ளன.
மேலும் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நெல்லையப்பர் சன்னதிக்கு உட்புறம் உட்பிரகாரத்தில் வாசுதேவ பெருமாள் தேவியர்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். நாகர் சன்னதியும் கோயில் முன் மண்டபத்தில் நவகிரகங்களுக்கு எனத் தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.
இங்குள்ள மகாமண்டபங்களில் காணப்படும் சிற்பங்கள் கண்களைக் கவரும் வகையில் மிகுந்த கலை நுட்பங்களுடன் ஜொலிக்கின்றன. ராஜகோபுரம் இல்லாத போதிலும் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா, சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீப விழா, திருக்கல்யாண விழா, திருவாசகம் முற்றோறுதல் விழா, பிரதோஷ விழாக்கள் மிக விவர்சையாக நடத்தப்பட்டு வருகின்றன.
