Devi Karumariamman: தேவர்களின் மூலசக்தி தேவி கருமாரியம்மன்!
வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து கருமாரி அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.
திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் சென்னையில் இருந்து பூவிருந்தவல்லி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கருமாரியம்மன் நாக உருவில் காட்சியளிக்கிறார்.
இந்த கோயிலில் முதன் முதலில் 1943 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அன்னை கருமாரி திருச்சாம்பலைக் கொண்டு வழிபடுவோரின் கஷ்டங்கள் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக நாளுக்கு நாள் இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கருமாரி அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர். கோயிலில் மூலவரும் உற்சவருமாய் தேவி கருமாரியம்மன் காட்சி தருகிறாள்.
தல விருட்சமாக வேம்பு மரம் உள்ளது. வேர்கன்னி அம்மை சூரர்களை வாய்ப்பதற்கு முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்த சக்தி இவள் என்பது புராணம். ’க’ என்பது பிரம்மனையும், ’ரு’ என்பது ருத்ரனையும், ‘மா’ என்பது மாலையும் குறிக்கும் எனக் கூறப்படுகிறது.
தேவர்களின் மூலசக்தி இவளே என்பதும் ஐதீகம். பஞ்சபூதங்களும் வழிபட்டு வேண்டிக் கொண்டதற்கு இணங்க அப்ப பஞ்ச பூதங்களை நாகங்களாக தன் முடி மேல் கொண்டு திருவருள் பாலித்தவள் கருமாரி என்பது தல வரலாறு. பிறை சந்திரன், மூவிலைச் சூலம், உடுக்கை, வாள், பொற்கிண்ணம் ஏந்தி சிவக்கோலம், நாராயணி என ஈருரு கொண்டு காட்சி தருவது திருவேற்காட்டில் தான்.
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஆடி திருவிழாவும், பிரம்மோற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு சீனிவாச பெருமாள் சன்னதி, சப்த மாதாக்கள், பிரத்யங்கரா சன்னதி, துர்க்கை சன்னதி, புற்றடி போன்ற பல சுற்றுச் சன்னதிகளும் உள்ளன.