தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Thiruparankundram Subramanya Swamy Temple

திருப்பரங்குன்றம் முருகனின் பெருமை!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2022 01:16 PM IST

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குறித்து இங்கே காண்போம்.

திருப்பரங்குன்றம் முருகன்
திருப்பரங்குன்றம் முருகன்

ட்ரெண்டிங் செய்திகள்

நக்கீரர் பெருமான் தான் பாடிய திருமுருகாற்றுப்படையில் முதல் தலமாகப் போற்றுவது இந்த திருப்பரங்குன்றத்தைத் தான். தேவசேனாவை மணந்து தேவசேனாபதியாக விளங்கும் தலம் இந்த திருப்பரங்குன்றம்.

திருமண திருத்தலம் என்பதாலோ என்னவோ விநாயகரும் கல்யாண விநாயகர் என்ற பெயருடன் சன்னதி கொண்டிருக்கிறார். பரங்கிரிநாதர் என்ற பெயருடன் சிவபெருமானும், ஆவுடைநாயகியாக அம்பிகையும் இங்கே அருள் பாலிக்கிறார்கள்.

இங்கே முருகப்பெருமான், விநாயகர், சிவபிரான், துர்க்கை, பெருமாள் இவர்களைத் தரிசிக்கும் முன் தனிச்சன்னிதி கொண்டுள்ள கருப்பண்ணசாமியையும், காளியம்மனையும் தரிசிக்க வேண்டும் என்பது இங்குள்ள மரபு.

பக்தர்கள் பெரும் திரளாக வருகிறார்கள். கடைகளில் பொரி வாங்கி சரவணப் பொய்கையில் துள்ளும் மீன்களுக்கு உணவாக்குகிறார்கள். அந்த தீர்த்தத்தை அள்ளி தங்களின் மேல் தெளித்துக் கொள்கிறார்கள்.

கம்பீரமாகக் கவசம் பூட்டிய கொடிமரம் பளபளக்கிறது. அதன் முன்னே நந்தி. நந்தியின் இருபுறமும் மயிலையும் மூஷிகத்தையும் காணலாம். கூத்தாடும் கணபதி, துர்க்கை வராகர், நரசிம்மர் என்று கலை அம்சம் மிக்க சிற்பங்களோடு கூடிய பெரும் தூண்களைக் காணலாம்.

மகா மண்டபத்தின் வாயிலில் இரட்டை விநாயகர், அதிகார நந்தி ஆகியோரை காணலாம். இங்கே முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை எண்ணெய்க் காப்பு, புனுகு சாத்துவதும் தான். அபிஷேகம் அனைத்தும் வேலுக்குச் செய்யப்படுகின்றன.

இங்கே பஞ்சலிங்க மூர்த்திகள், சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டு. கோலோர்த்தனாம்பிகை என்ற பெயருடன் தனிச்சந்தியில் அருள் பாலிக்கிறார் அம்பிகை. கவலைகள் அனைத்தையும் போக்கும் கந்த பெருமாளைத் தரிசிக்கப் பக்தர்கள் கூட்டம்கூட்டமாக காத்திருக்கிறார்கள்.

தாய்க்குப் பிரணவத்தின் பொருளைத் தந்தை உபதேசித்த போது மடியில் குழந்தை முருகன் அமர்ந்து கேட்டு அதன் பொருளை உணர்த்தார். நேரடியாக உபதேசமாகப் பெறாமல் மறைமுகமாக அறிந்தது தவறெனக் கருதி இங்கே தவமிருந்தார். சிவசக்தி தரிசனம் பெற்றார். அந்த நாளே தைப்பூசம் எனப்படுகிறது.

இந்த வேலாயுதத்தை நாம் சரணடைந்தால் நம் வாழ்வில் சந்தோஷம் எப்போதும் சூழ்ந்திருக்கும் என்பது ஐதீகம்.

WhatsApp channel