Kulanthai Velappar: இவரை தரிசித்த பின்னரே பழனி யாத்திரை!
பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்பு பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளங்குகின்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானை போல அரசப்பிள்ளை பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்பர் சுவாமியும் அருள்பாலிக்கின்றார். மற்ற கோயில்களை போன்று இல்லாமல் சற்று வினோதமாக மிட்டாய்களை காணிக்கை செலுத்தி வினோத வழிபாடு செய்து வருகின்றனர்.
குழந்தை வரம், கல்வி, செல்வம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதனால் இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனுக்கு மிட்டாய் முருகன் என்கின்ற சிறப்புப் பெயரும் உண்டு. இக்கோயிலின் நுழைவாயிலில் சித்தி விநாயகர் சர்பத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
கால பைரவரும் தக்ஷிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலின் கருவறை மண்டபத்தில் பார்வதி திருக்கல்யாணம், வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், விநாயகர் திருக்கல்யாணம் உள்ளிட்ட காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு இருக்கின்றது.
கோயிலில் மூன்று கால பூஜைகளும் நடைபெறுகின்றது. அரளி மரம் தான் இத்தலத்தின் தல விருட்சமாகும். மேலும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்பு பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்கின்றனர்.