தமிழ் செய்திகள்  /  Astrology  /  Highlights Of Mandurai Amravaneswarar Temple

பழமையான ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் சிறப்புகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2022 07:15 PM IST

சோழ மன்னன் ஸ்வேத கேதுவால் திருப்பணிகள் செய்யப்பட்ட லால்குடி அருள்மிகு பாலாம்பிகை அம்மன் உடனுறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்
ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் இருபக்கச் சுவரில் விநாயகரும், ஆறுமுகம் காட்சி தருகிறார்கள். ராஜகோபுரத்தில் எதிரில் நந்தி மண்டபம் பலிபீடம் அமைந்துள்ளது. தரையில் வைக்கப்பட்டுள்ள இரு நந்திகள் முற்கால சோழர் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

நந்தி மண்டபத்திற்கு வடக்கு கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பண்டிதர் சாமி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்கள். இங்குப் பிரசாதமாக ஆலமரத்து வேர்மண் வழங்கப்படுகிறது. கருப்பண்ணசாமியை வேண்டி வேல்கம்பு, சிறிய யானை உருவங்கள் வைக்கப்படுகிறது.

இத்தலத்து மூலவர் சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். மூலவருக்கு முன் உள்ள அர்த்தமண்டபத்தில் முருகன், விநாயகரையும் மூலவருக்கு அருகில் உள்ள அர்த்தமண்டபத்தில் அம்மனையும் வழிபடலாம். 

மூலவரின் வலது சுவற்றில் நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி, திருமாலும், பின் சுவற்றில் ஆதிசங்கரரும், இடது சுவற்றில் பிரம்மாவும், துர்க்கை அம்மன் எதிரே சண்டிகேசுவரரும் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.

வடமேற்கு திசையில் தண்டாயுதபாணி, ஸ்ரீ கஜலட்சுமி தனித்தனி சன்னதிகளில் காட்சிதருகின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களுக்குத் தனி சன்னதி உள்ளது. நடுநாயகமாகச் சூரியன் தன் இரு தேவியருடன் மேற்கு நோக்கி இருக்க மற்ற அனைத்து கிரகங்களும் அவரை நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சன்னதியில் பைரவரையும், சூரியனையும் வழிபடலாம். தல விருட்சமாக மாமரம் உள்ளது. மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் அர்ச்சித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

மேலும் கல்வியறிவு, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகள் நிவர்த்தியாகும். சித்திரை தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா, ஆடி அனைத்து வெள்ளி, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி, நவராத்திரி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தை மாதப் பிறப்பு, பொங்கல் விழா, மாசியில் மகம், மகா சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகிறது. 

பங்குனி மாத முதல் மூன்று நாட்கள் சூரியனின் ஒளிக் கதிர்கள் இறைவன் மீது நேரடியாகப்படும் அதிசயம் காணப்படுகிறது.

WhatsApp channel