பெண்களின் சபரிமலை எது தெரியுமா? - தெரிந்து கொள்ளலாம் வாங்க!
Mandaikadu bhagavathi Temple: பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபடும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி கொடை திருவிழா கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த கோயிலில் பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபடுவார்கள். அப்படி என்ன இந்த கோயிலில் சிறப்பு என்பது குறித்து இங்கே காண்போம்.
ட்ரெண்டிங் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். பெண்கள் இக்கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும். அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பெண்கள் 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி இந்த கோயிலுக்கு வருவதால் பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் ஆடுமாடுகளை மேச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம்.
ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் இருந்ததால் மந்தைக்காடு என்று அழைக்கப்பட்டு நாளடைவில் இப்பகுதி மண்டைக்காடு என்று பரவியதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் தான் பகவதி அம்மன் புற்று வடிவில் பக்தர்களுக்கு காட்சி தந்ததாக கூறுகிறார்கள்.
நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும், குளச்சலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 45 அடி உயரத்தில் ராஜ கோபுரத்துடன் கோயில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கு வரும் பக்தர்களை வேண்டுதல்கள் நிறைவேறுவதால் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து ஆண்கள் சபரிமலைக்கு செல்வது போன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் பெண்கள் இருமுடி கட்டி வந்து பகவதி அம்மனை தரிசிக்கின்றனர். கோயிலில் உள்ள அம்மனுக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் தீராத நோய்களுக்கு தீரும் என்பது ஐதீகம்.
இப்பகுதி தென்னை மரங்களால் சூழ்ந்து இருப்பதால் தென்னை மரத்தில் முதலில் கிடைக்கும் தேங்காயை பகவதி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவது தொன்று தொட்டு வருகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் கொடை விழா நடைபெறுகிறது. அதிகாலை 5 மணி, மதியம் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கிறது. காலை 6 மணி மதியம் 12.30 மணி, மாலை 6 மணி இரவு 7.30 மணி ஆகிய நேரங்களில் தீபாராதனை நடைபெறுகிறது.
தென் தமிழ்நாட்டில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் பகவதி அம்மன் கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதால் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.