HT Yatra: நிம்மதி தரும் மருதமலை.. சுயம்புவாக எழுந்த முருக பெருமான்
மருதமலை முருகன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டவர் முருக பெருமான். அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டில் பக்தர்களை காத்து வரும் முருகப்பெருமானுக்கு ஏராளமான விசேஷ கோயில்கள் இருந்து வருகின்றன. அந்த வகையில் மிகவும் அற்புத தலங்களில் ஒன்றாக விளங்கக் கூடியது மருதமலை முருகன் கோயில்.
மலைகள் இருக்கும் இடம் முருகப்பெருமானின் இடம் என்பதற்கு ஏற்றவாறு குன்றியிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என முருகப்பெருமானை வாழ்த்தி கூறுவது உண்டு. முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த மருதமலை திருக்கோயில் ஆனது ஏழாம் படை வீடாக புகழ் பாடப்பட்டு வருகிறது.
தல வரலாறு
பாம்பாட்டி சித்தர் என்பவர் முருகன் மீது அதிக பக்தி கொண்டு திகழ்ந்து வந்தார். முருகப்பெருமானை வழிபடுவதற்காக தானே ஒரு புதிய சிலையை வடித்தார். அந்த சிலை தான் தற்போது வரை கருவறையில் வழிபாட்டிற்கு இருந்து வருகிறது.
பழனி கோயிலில் இருப்பது போலவே முருகப்பெருமான் கையில் தண்டத்துடன் இரு கரங்கள் கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். இவருடைய தலையின் பின்புறம் குடுமி இருக்கும். காலில் தண்டை அணிந்தபடி தண்டாயுதபாணியாக காட்சி கொடுத்து வருகிறார்.
தினமும் இங்கு முருக பெருமானுக்கு ராஜ அலங்காரம், சந்தன காப்பு, மற்றும் விபூதி காப்பு உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. கிருத்திகை மற்றும் தைப்பூசத் திரு நாட்களில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. சுய ரூபத்தில் தண்டாயுதபாணியாக முருகப்பெருமானை அர்த்த ஜாம பூஜையில் மட்டுமே காண முடியும்.
இந்த கோயிலுக்கு அருகில் இருக்கக்கூடிய மழை பாறைகளுக்கு மத்தியில் ஒரு குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது. பாம்பாட்டி சித்தரின் வலது கையில் மகுடியும், இடது கையில் தடியும் இருக்கும். முருக பெருமானுக்கு பூஜை செய்துவிட்டு, அடுத்தபடியாக பாம்பாட்டி சித்தருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
தற்போது வரை பாம்பாட்டி சித்தர் முருகப் பெருமானுக்கு பூஜை செய்து வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது. பாம்பாட்டி சித்தர் சன்னதியில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து விட்டால் மறுநாள் வந்து பார்த்தால் பால் குறைந்து இருக்கும். அந்த பாலை முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக பாம்பாட்டி சித்தர் எடுத்துக் கொள்வதாக நம்பப்படுகிறது.
பாம்பாட்டி சித்தர் சன்னதிக்கு அருகே உள்ள ஒரு பாறையில் நாக வடிவம் ஒன்று இருக்கும். முருக பெருமான் பாம்பாட்டி சித்தருக்கு இந்த நாக வடிவத்தில் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் சிவன் மற்றும் பார்வதிக்கு நடுவில் விநாயகர் வீசியிருந்து அருள் பாலிக்கிறார். பெற்றோருக்கு மத்தியில் விநாயகர் பெருமான் அமர்ந்திருந்து காட்சியளிப்பது இங்கு மிகப் பெரிய சிறப்புகுறியது ஆகும்.
இந்த கோயிலுக்கு செல்லும் வழியில் தான்தோன்றி விநாயகர் சன்னதி உள்ளது இவர் சுயம்புவாக எழுந்த விநாயகப் பெருமான் என நம்பப்படுகிறது. உடல் இல்லாமல் யானை தலை மட்டும் இங்கு இருக்கும். இந்த தலையில் இருக்கக்கூடிய தும்பிக்கை மலையில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் சன்னதியை நோக்கி காட்சி கொடுத்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.
சுயம்பு வடிவாக காட்சி கொடுத்த ஆதி முருகன் மூலஸ்தானம் எங்கு இருக்கின்றது. இது ஆதி மூலஸ்தானம் என அழைக்கப்படுகின்றது. இந்த சன்னதியில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் வள்ளி தெய்வானையோடு அருள் பாலித்து வருகிறார். வள்ளி உயரமாகவும் தெய்வானை சற்று உயரம் குறைவாகவும் இருப்பார்கள். முதலில் இந்த முருகனுக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பிறகு பிரதான முருகனுக்கு பூஜை செய்யப்படுகிறது.
இங்கு வீற்றிருக்க கூடிய முருக பெருமானை வழிபட்டால் மன நிம்மதியும், மன அமைதியும் உண்டாகும். பிணி, தீய எண்ணங்கள், எதிரிகளால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் உள்ளிட்டவைகள் அனைத்தும் விலகும் என நம்பப்படுகிறது
மருதமலை கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கே உணவு விடுதி தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. பேருந்து வசதிகளும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9