HT Yatra: பல்லிகளுக்கு சாபம் நீங்கிய தலம்.. ஆசி வழங்கிய வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
நாம் சென்று வரும் கோயில்கள் எத்தனையோ வரலாறுகளை தன் வசம் வைத்துள்ளன. கட்டப்பட்டதற்கு ஒரு காரணம் கூறப்பட்டாலும் அந்தந்த கோயில்களில் வீற்றிருக்கும் கடவுளுக்கு என தனி புராண கதைகள் கூறப்படுகின்றன.
அந்த வரிசையில் இன்று வரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில். பல்வேறு விதமான கலாச்சாரத்தை கொண்டுள்ள இந்த திருக்கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் இருப்பதை காண முடியும். அதன் உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது.
புராண வரலாறு
ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கௌதம முனிவரின் சீடர்களாக திகழ்ந்து வந்தனர். அவருக்கு பணிவிடை செய்து வருவதே இவர்களின் வேலையாக இருந்தது. ஒருநாள் கௌதம் ஒரு பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது. அவர் பூஜைக்காக வைத்திருந்த தீர்த்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது. இதனை பார்த்த கௌதமர் கடுமையான கோபம் அடைந்தார்.
உடனே தனது சீடர்களை பார்த்து நீங்கள் இருவரும் பல்லிகளாக போக கடவது என சபித்து விட்டார். தெரியாமல் தவறு நடந்து விட்டது. எங்களை மன்னித்து விடுங்கள் என இருவரும் கூறியுள்ளனர். நாங்கள் சாப விமோசனம் பெற என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு கௌதமர் நீங்கள் இருவரும் வரதராஜ பெருமாளை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் சீடர்களான இருவரும் வரதராஜ பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளனர். அவர்களின் பக்திக்கு மயங்கிய வரதராஜ பெருமாள், உங்களின் ஆன்மா வைகுண்டம் வந்து சேரும். சரிதம் மட்டும் பஞ்சம் உலோகங்களாக எனக்கு பின்னால் இருக்கும் எனக் கூறியுள்ளார். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசனம் செய்தால் சகலதோஷங்களும் நீங்கும் என்று அருளியுள்ளார்.
அதன் காரணமாகவே வரதராஜ பெருமாள் கோயிலில் பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டு தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்லியின் மீது தங்க முலாமும், மற்றொரு பல்லியின் மீது வெள்ளி முலாமும் பூசப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அதனை தொட்டு வணங்கி செல்கின்றனர் இதனால் சகலதோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.
பல்லி விழும் பலன்கள், பல்லியால் ஏற்படும் தோஷங்கள் என அனைத்தும் இந்த மண்ணில் கிடையாது என ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த காஞ்சி மகா பெரியவர் கூறியுள்ளார். அந்த அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக வரதராஜ பெருமாள் கோயில் திகழ்ந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9