தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: வாசுகி பாம்பு வேண்டி பெற்ற தலம்.. தோஷம் போக்கும் கேது பகவான்

HT Yatra: வாசுகி பாம்பு வேண்டி பெற்ற தலம்.. தோஷம் போக்கும் கேது பகவான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 22, 2024 05:45 AM IST

கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில்
கீழப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில்

கீழப்பெரும்பள்ளத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு நாகநாத திருக்கோயில் பழமை வாய்ந்த புனித கோயிலாக விளங்கி வருகிறது. இந்த கோயிலில் சிவன் நாகநாத சுவாமியாகவும் அம்மன் சௌந்தரநாயகியாகவும் காட்சியளித்து வருகின்றனர். இந்த திருக்கோயில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்கி வருகிறது.

கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கேது பகவான் மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். ஞானத்தின் நாயகனாக விளங்கக்கூடிய கேது பகவானை வழிபட்டால் அறிவு மற்றும் சிந்தனை என அனைத்தும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

தல வரலாறு

 

அமிர்தம் பெறுவதற்காக மந்திர மலையை மத்தாக எடுத்து, வாசுகி பாம்பை கயிறாக திரித்து தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். அப்போது வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு, நஞ்சை கக்கியது. அதிலிருந்து கொட்டிய ஆலகால விஷம் அனைவரையும் தாக்கியது.

இதனைக் கண்ட தேவர்கள் மற்றும் அசுரர்கள் பயந்து நடுங்கி ஓடி விட்டனர். உடனே சிவபெருமான் வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை குடித்தார். இது தனது கணவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்காக பார்வதி தேவி கழுத்தில் கை வைத்து அழுத்தினார். முகம் முழுவதும் சிவபெருமானுக்கு நீல நிறமாக மாறியது அதிலிருந்து அவர் நீலகண்டர் என்ற திருப்பெயரைக் கொண்டார்.

அமிர்தத்தை கொடுத்து விட்டால் அழிக்க முடியாத சக்தியாக மாறிவிடுவார்கள் என்று எண்ணி அசுரர்களுக்கு அமிர்தம் கொடுக்கப்படவில்லை. இதில் ஆத்திரமடைந்த அசுரர்கள் வாசுகி பாம்பை கசக்கி சுருட்டி தூக்கி எறிந்தனர்.

உடல் முழுவதும் காயத்துடன் கடற்கரை அருகே உள்ள ஒரு மூங்கில் காட்டில் வாசுகி பாம்பு விழுந்தது. அதற்குப் பிறகு கொஞ்ச நாள் கழித்து உயிர் பிழைத்த வாசுகி பாம்பு, தனது விஷத்தை சிவபெருமான் குடித்துவிட்டார் என மிகவும் வருத்தப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே சிவபெருமானை வேண்டி வாசுகி பாம்பு தவம் இருந்தது.

தவத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் வாசுகி பாம்பிற்கு காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும் என சிவபெருமான் கேட்டார். எனது தவறுக்காக முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் தவம் இருந்த இந்த மூங்கில் காட்டில் நீங்கள் குடி கொள்ள வேண்டும் கேது பகவானால் ஏற்படக்கூடிய தொல்லைகளை நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என வாசுகி பாம்பு வரம் கேட்டது.

அதன் பேரில் சிவபெருமான் கோயில் கொண்ட இடம் தான் இந்த கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கேது, தோஷத்தை நிவர்த்தி செய்யும் வகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

கேது பகவான் மேற்கு திசை நோக்கி சிவபெருமானை கரம் கூப்பி வணங்கியபடி அனுகிரக மூர்த்தியாக காட்சி அளித்து வருகிறார். வாசுகி பாம்பு மூங்கில் காட்டில் தவம் இருந்த காரணத்தினால் இந்த தலத்தின் தல விருட்சமாக மூங்கில் விளங்கி வருகிறது.

பரிகாரம்

 

கேது தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய நாகநாத சுவாமி உடனுறை சௌந்தர்ய நாயகி இருவரையும் ஏழு முறை வலம் வந்த பின்னர், கேது பகவானுக்கு பரிகார பூஜை செய்தால் தோஷம் விலகும் என கூறப்படுகிறது.

இருக்கும் இடம்

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பூம்புகாரில் இருக்கக்கூடிய தர்மகுளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணிக்கக் கூடியவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி பேருந்து அல்லது ரயில் மூலம் மயிலாடுதுறை வந்து இந்த திருக்கோயிலுக்கு வரலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel