தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The History Of Kangeyanallur Subramaniya Swamy Temple

HT Yatra: காங்கேயன் என பெயர் பெற்ற முருகன்.. திருமண கோலத்தில் அருள் காட்சி

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 06:00 AM IST

காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி
காங்கேயநல்லூர் சுப்பிரமணிய சுவாமி

ட்ரெண்டிங் செய்திகள்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முருக பெருமான் பல கோயில்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்களை கொண்ட கடவுள்களில் முருகப்பெருமானும் ஒருவர்.

அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு இருக்கக்கூடிய மூலவரின் பெயர் காங்கேயன். வள்ளி மற்றும் தெய்வானையோடு முருகப்பெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுக்கின்றார்.

இந்த சன்னதியின் முன் மண்டபத்தில் அருணகிரிநாதர் இருக்கின்றார். பரம முருக பக்தரான கிருபானந்த வாரியார் தந்தை மழையதாசர் இந்த கோயிலில் கோபுரம் கட்ட விரும்பினார். திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய திருப்புகழ் சுவாமி கொடுத்த ஒரு ரூபாய் மற்றும் விபூதியை வைத்து மலையதாசர் கோபுரத்தை கட்டினார் கூறப்படுகிறது.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த திருக்கோயிலில் வந்து காங்கேய முருகனை செவ்வரளி மலர் கொண்டு வழிபாடு செய்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் விலகும் என நம்பப்படுகிறது. மேலும் தயிர் சாதம் நிவேதனம் செய்து படைத்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்பப்படுகிறது.

தல வரலாறு

 

அசுரர்களால் தேவர்கள் மிகவும் துன்பப்பட்டு வந்தனர். அவர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டும் என தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். இதன் காரணமாக சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து தீ பிளம்புகளை வெளியிட்டார். அதிலிருந்து சிதறிய ஆறு பொறிகளை வாயுதேவன் மற்றும் அக்னி தேவன் இருவரும் கங்கையில் சேர்த்தனர்.

அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவாகி கங்கையில் இருந்த தாமரை மலர்கள் மீது தவழ்ந்தன. உடனே அங்கு சென்ற பார்வதி தேதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கி முருக பெருமானாக மாற்றினார். முருக பெருமான் ஆறுமுகங்கள் கொண்டு காட்சி கொடுத்தார்.

கங்கையில் முருகப்பெருமான் குழந்தையாக தவழ்ந்த காரணத்தினால் அவருக்கு காங்கேயம் என பெயர் வைக்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்த திருத்தலத்தில் இருக்கக்கூடிய முருக பெருமான் காங்கேயன் என அழைக்கப்படுகிறார்.

தலத்தின் பெருமை

 

தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் முருக பெருமான் வடக்கு கோபுரத்தின் கீழ் காட்சி கொடுப்பார். ஏனென்றால் வடக்கு திசை குபேர திசை என்பதால் அந்த திசை நோக்கி முருக பெருமான் காட்சி கொடுப்பார் அந்த நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

அறுபடை வீடுகளில் நடைபெறும் அனைத்து விதமான பூஜை மற்றும் வழிபாடுகள் அனைத்தும் இந்த கோயில்களிலும் நடைபெறும். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்த திருத்தலத்திற்கு ஒரு முறை அருணகிரிநாதர் வந்துள்ளார் அப்போது முருகப்பெருமானுக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து பூஜை செய்துள்ளார்.

அந்த நேரத்தில் ஆறு அடியார்கள் அந்த கோயிலுக்கு வந்துள்ளனர் முருகப்பெருமானுக்கு நிவேதனம் செய்த தயிர் சாதத்தை அருணகிரிநாதர் அந்த ஆறு அடியார்களுக்கு படைத்துள்ளார். அருணகிரிநாதரின் நிவேதனத்தை ஏற்றுக் கொள்வதற்காகவே ஆறு அடியார்களாக முருக பெருமான் வந்தார் என்பது ஐதிகமாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தற்போது கூட இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு உச்சிக்கால பூஜை நடந்து முடிந்த பிறகு ஆறு அடியார்களுக்கு அன்னதானம் செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது.

அமைவிடம்

 

வேலூரில் இருந்து காங்கேயநல்லூர் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel