Shasti Fast: கேட்டதும் கொடுப்பவர் முருகன் - சஷ்டி தான் சரியான நாள்..!
சஷ்டி திருநாளில் முருகப்பெருமானின் வழிபட்டு விரதம் இருந்தால் கஷ்டங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
சஷ்டி திருநாள் முருகனுக்கு மிகவும் விசேஷத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
மாதம் தோறும் வருகிற சஷ்டி திருநாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம். விரதம் இருக்க முடியாதவர்கள் அந்த நாள் முழுவதும் முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி கவசங்களைப் பாடி பாராயணம் செய்து முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.
விரதம்
இந்த சஷ்டி திருநாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷமாகும். இந்த நாளில் காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் வீட்டுப் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.
முருகப்பெருமானுக்குச் செந்நிற மாலைகளைச் சூட்ட வேண்டும். செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால் சிக்கல்கள் அனைத்தும் தீரும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
வழிபாடு முறை
காலை மற்றும் மாலை நேரத்தில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். தனியாக அருள்பாலிக்கும் முருகன் கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மற்ற கோவில்களில் இருக்கும் முருகன் சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்யலாம்.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் போது தரிசனம் செய்தால் மேலும் சிறப்பாகும். வீட்டில் முருகப் பெருமானுக்கு எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து நைவேத்தியம் படைக்கலாம்.
அந்த உணவை மற்றவர்களுக்குத் தானமாக வழங்கினால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் எனக் கூறப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொண்டால் பயம் அனைத்தும் நீங்கி நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.