Hanuman Vazhipadu: இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?
1500 ஆண்டுகள் பழமையும், பாரம்பர்யமும் கொண்ட, புகழ் பெற்ற "நாமக்கல் ஆஞ்சினேயர்" ஆலயம் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு மகிழ்வோம்.
"நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும்" நன்மை, தீமை இரண்டையும் ஆராய்ந்து, அவற்றுள், நன்மையான செயல்களை மட்டுமே செய்யும் பண்பைக் கொண்டவன், எந்த காரியத்தையும் செய்யத் தகுதி வாய்ந்தவன் என்கிறார் வள்ளுவர். இந்த இலக்கண வரையரையினுள் மிகச் சரியாகப் பொருந்துபவர் வீர, தீர, ஆஞ்சிநேயரே.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விரும்பும் அனுமனைப் பணிந்தால், அச்சம் நீங்கும். மனநடுக்கம் குறைந்து, தன்னம்பிக்கை ஏற்படும். வடை மாலை சூட்டி வழிபட, தடைகள் அகலும்,வண்ண மாலைகள் சூட்டி வழிபட, எண்ணங்கள் நிறைவேறும். அர்ச்சனைகள் செய்து வழிபட, பிரச்சனைகள் தீரும், வாழைப்பழம் விளக்கேற்றி வழிபட, வாரிசுகள் உருவாகும் எனும் நம்பிக்கையில், மாருதி வழிபாடு மகிழ்ச்சி கலந்த வாழ்வு தரும் என அனைவரும் மகிழ்வர்.
1500 ஆண்டுகள் பழமையும், பாரம்பர்யமும் கொண்ட, புகழ் பெற்ற "நாமக்கல் ஆஞ்சினேயர்" ஆலயம் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு மகிழ்வோம்.
மலைக்கோட்டையின் கீழே உள்ள இவ்வாலயத்தில், ஒரே கல்லினால் செய்யப்பட்ட 22 அடி உயர,கை கூப்பிய படி நிற்கும் ஆஞ்சநேயரைக் காண பரவசம் ஏற்படும். கோபுரமில்லாது,திறந்த வெளியில்,பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதற்கு ஒரு புராணக்கதை உண்டு. அதாவது,லோகநாயகரான ஸ்ரீ நரசிம்மரே ,கிரி உருவில்,மேல் விதானம் இல்லாது இருக்க,தனக்கும் தேவை இல்லை என இங்கு நிற்பதாக ஐதீகமாம்.
இராமாயண காலத்தில், சஞ்சீவி மூலிகையைப் பெற,இமயத்திலிருந்து, குன்றினைப் பெயர்த்து எடுத்து வந்து, வேலைகள் முடிந்ததும்,குன்றினை அதே இடத்தில் வைத்து விட்டு திரும்பினார் ஆஞ்சநேயர். அப்போது, அங்கிருந்து, ஒரு பெரிய சாலிக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்து வந்தார்.
அந்த நேரம், சூரியன் உதயமானதால், தமது கையிலிருந்த, சாளக்கிராமத்தை, கீழே வைத்துவிட்டு, "சூர்ய நமஸ்காரம்" செய்தார். பின்னர் திரும்ப எடுக்க வரும்போது, முடியவில்லை. அப்போது ஒரு அசிரீரி அவருக்குக் கேட்டது."ஸ்ரீ ராமருக்கு செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு,என்னை வந்து எடுத்துச் செல்" என்ற விபரம் கேட்டு மகிழ்ந்து, துதித்து விட்டுச் சென்றார்.
ஸ்ரீ ராமர், சீதா தேவியை மீட்ட பிறகு, ஆஞ்சநேயர் அங்கு மீண்டும் திரும்பி வர, ஆச்சர்யத்தில் அதிசயமாய், அதி உன்னதமாய், அவர், அங்கு, விட்டுப் போன,சாளக் கிராமம் வளர்ந்து, பெரிய நரசிம்ம மூர்த்தியாக நிற்க, தெய்வீகமானதொரு புரிதலில் உணர்ந்து,உடன் நரசிம்ஹ மூர்த்தியை வணங்கித் தொழுதவாறு நிற்கிறார் என்கிறது தல வரலாறு.
ஸ்ரீ அனுமனின் தனிச் சிறப்பால், இந்த நகரமே புகழ் பெற்ற புண்ணிய பூமியாகி,இன்று எழிலாய், மிளிர்ந்து நிற்கிறது. வெளியூர்,உள்ளூர் பக்த கோடிகள் வந்து போன வண்ணம் இருக்கும் கண் கொள்ளாக் காட்சி தினசரி காணலாம். இன்றைய ஜெயந்தி விழா, இங்கு, மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு பெரிய விழா.
சத்யமும்,தெளிவும்,பேசும் சொற்களைத் தேர்ந்து எடுத்து பேசுகின்ற "சொல்லின் செல்வனது". உருவம் பதித்த, ஸ்ரீ சைலம் காடுகளில் மட்டுமே கிடைக்கும் "ஹனுமத்பீரம்" எனும் மரத்தின் இலைகள் ஆன்மிக அதிசயங்களில் ஒன்றாகப் இப்போது பேசிக் கொள்கின்றனர்.
ராகுவுக்கு உகந்த தானியம் உளுந்து, இதனால் செய்யப்பட்ட வடைகளை மாலையாய் கோர்த்து அனுமனுக்கு அணிவித்து, சர்ப்ப, ராகு தோஷ பரிகாரம் பெறலாம். மாத மாதம் இங்கு நடைபெறும் வைபவமிது.வெற்றிலை மாலை அணிவித்தால், பிரிந்த தம்பதியர் சேருவார் என்றும் ஐதீகம் உண்டு.
ஆதிமுதற் கடவுளான விநாயகப் பெருமான் ஆலயங்கள் போல, அனுமன் ஆலயங்களும் அனைத்து ஊர்களிலும் உண்டு. ஆஞ்சநேயரை வழிபட்டு, நலம் பெறுவோம்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை.
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்