Kali Devi Vazhipadu: பக்தர்கள் வேண்டுவதை நிறைவேற்றித் தரும் காளி தேவி.. வழிபட வேண்டிய காலம் எப்போது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kali Devi Vazhipadu: பக்தர்கள் வேண்டுவதை நிறைவேற்றித் தரும் காளி தேவி.. வழிபட வேண்டிய காலம் எப்போது தெரியுமா?

Kali Devi Vazhipadu: பக்தர்கள் வேண்டுவதை நிறைவேற்றித் தரும் காளி தேவி.. வழிபட வேண்டிய காலம் எப்போது தெரியுமா?

Manigandan K T HT Tamil
Published Mar 05, 2024 06:00 AM IST

"குங்குமக் காளி, நீ, குலவை இட்டு வரும்போது, குழந்தைகள் கூட, குதூகலம் கொல்லுதும்மா"

மாதிரிப்படம்
மாதிரிப்படம் (freepik)

இது போன்ற போட்டோக்கள்

வெட்ட வெளியையே ஆலயமாகக் கொண்டு அருள் புரிந்த இந்த காளி அம்மன், எல்லைக்கான ஊர் தெய்வங்கள் என்று ஆக்கப்பட்டபின், ஊர் எல்லையிலேயே ஆலயங்கள் அமைத்து, வழிபடும் தெய்வமாகவும் வணங்கப்படுகிறார். அம்மன் அருளுக்கு எல்லை உண்டோ? ஆதி சக்தியின் அம்சமான இவரை வழிபட்டனர். வெற்றி பெற்றனர். வளம் பெற்று மலர்ச்சி கண்டனர்.

"குங்குமக் காளி, நீ, குலவை இட்டு வரும்போது, குழந்தைகள் கூட, குதூகலம் கொல்லுதும்மா" என்று பூஜிக்கப்படும் காளி, ராகு கால பூஜையில், மனம் மகிழ்ந்து, பக்தர்கள் வேண்டுவதை நிறைவேற்றி வைக்கிறார். இவ்வாலயங்கள் ஒவ்வொன்றும், புனிதமான வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டது.

காளியம்மனின், அரூப, சொரூப வடிவங்களுள்ள சக்தி பீடங்கள் 51 என்று சக்தி புராணங்கள் தெரிவிக்கின்றன. சில புராணங்களோ அது 108 எனக் கூறும்.

மராட்டிய சிவாஜி ராஜா, ராஜ் புத்ர ராணா பிரதாப சிம்மன், மகாராஜா விக்ரமாதித்தன், கவி காளிதாஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆகிய புகழ்பெற்ற பலரும் காளியம்மனின் தீவிர பக்தர்களே.

இந்த வகையில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், அமையப்பெற்ற, பழனி அருகே, பெரிய கலையம்புத்தூரில் உள்ள, "ஐகோர்ட்டு பத்ரகாளி அம்மன் ஆலயம்" பற்றி, இப்பதிவில் பார்ப்போம்.

அம்மன் கோவில் அமைந்துள்ள இந்த ஊரில், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கோவிலில், பிப்ரவரி 15 2024-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பான தரிசனம்,வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கிடைத்தது.

இங்கு வாழும் இஸ்லாம் நண்பர்கள், அவர்களின் ஜமாத் சார்பில்,பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு, சீர்வரிசை பொருட்களை வழங்கி, மத நல்லிணக்கத்தை பறைசாற்றி உள்ளனர். மங்கலப் பொருட்களான வெற்றிலை,பாக்கு,இனிப்பு நன்கொடைப் பணம் தவிர ஒரு பீரோவை ஆட்டோவில் ஏற்றி வர,பொன்னாடை போர்த்தி அவர்களை ஆலய சார்பாக வரவேற்று பெற்றுக் கொண்டனர்.சீர் வரிசையுடன் ,அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பள்ளிவாசல் நிகழ்ச்சிகளுக்கும், முறைப்படி, இந்துக்களுக்கு அழைப்பு கொடுத்து அழைப்பதாகத் தெரிகிறது. ஆகவே மத நல்லிணத்தை கடைபிடிக்கும் வகையில், இந்த கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்து கொண்டது ,மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பாகுபாடற்ற ஒற்றுமை நமது தேசத்தின் வலிமை.

இதே போல,தஞ்சாவூர் கும்பகோணம் பேருந்து தடத்தில் அமைந்துள்ளது ,சக்கராப்பள்ளி, ஸ்ரீ சக்கரேஸ்வரர் ஆலயம்,அங்கும்,ஆலயத்தைச் சுற்றி இஸ்லாம் நண்பர்களே அதிகம். இவ்வாலயம் சார்பாக இவ்வூரில் ,நடக்கும் "சப்தஸ்தானம் "என்கிற ஏழு ஊரின் ஆலய அழகிய பல்லக்குகள்,கண்ணாடி பல்லக்கு உள்பட, கூடி ஊர்வலத்துடன்,வான வேடிக்கைகளுடன்,ஒரு பெரிய விழாவாக நடக்கிறது. அங்கும் ,சர்வ சமய நல்லிணக்கம் செழித்து, வளர்வது மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்படி மத நல்லிணக்கத்தை போற்றி விழா எடுக்கும் அதே நேரத்தில் ,நம் புராண ஆலயங்களை, பராமரிப்பு செய்வது மிக அவசியம். சிறந்தது வழிபாடா தொண்டா என்று கேட்கும் போது ,இரண்டும் சிறந்தது. ஆனால் வழிபாட்டுடன் தொண்டு செய்வது மிக நல்லது என்பார் ஐயா ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் அவர்கள். மேலும்

"புனரபி ஜனனம்

புனரபி மரணம்"

என்கிறது, ஆதிசங்கரரின் பஜகோவிந்தம். புண்ணியம் கிடைக்க ,ஆலயங்கள் புனரமைப்பில் கவனம் செலுத்து என்பது, காலம் நமக்கு சொல்லும் செய்தி.

சின்னச்சின்ன புராதன ஆலயங்களும், ஆலயம் தொடர்பான இடங்களும், மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வின் காரணமாக ,சமீபத்தில், கும்பகோணம் சங்கர மடத்தின் அருகில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சரவண தீர்த்தம் எனும் குளம்,சிட்டி யூனியன் வங்கி சமூக பங்களிப்பு திட்ட நிதியின் கீழ் சீர்படுத்தப்பட்டது.இங்கு 68 வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திர சேகர் சரஸ்வதி சுவாமிகளின் சிறப்பான பட்டாபிஷேகம் 1907 ம் ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு ,பொதுநல நிதியிலிருந்தும், கோவில் மற்றும் உபயதாரர் நிதி மூலமும்,அனைத்து ஆலய இடங்களிலும், பலவிதமான,வேண்டிய பணிகள்,செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உதாரணத்திற்கு பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலில் சன்னதிகள்,மடப்பள்ளி,மரக் கதவுகள்,தரை தளம் ஆகிய பணிகளுக்கு 1.14 கோடி செலவில் செய்ய, பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த ஐகோர்ட் பத்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு பழனியை சேர்ந்த திரு சுந்தரேஸ்வரன் எனும் தீவிர பக்தர், ரூ 18 லட்சம் செலவில் 16 அடி உயரம் உள்ள, வீதிஉலா நடத்த ஐம்பொன் ரதம் மற்றும் இரண்டரை அடி உயரம் உள்ள அம்மன் சிலையையும், சில வருடங்கள் முன்பு நன்கொடையாக வழங்கியுள்ளார். இக்கோவிலில் ஆண்டு தோறும்‌ பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, வைகாசி மாதம் தீ மிதித்தல் போன்ற பல விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்