எதையும் சாதிக்கும் மனோதிடம், தன்னம்பிக்கை கிடைக்க இவரை வழிபடுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  எதையும் சாதிக்கும் மனோதிடம், தன்னம்பிக்கை கிடைக்க இவரை வழிபடுங்க!

எதையும் சாதிக்கும் மனோதிடம், தன்னம்பிக்கை கிடைக்க இவரை வழிபடுங்க!

Manigandan K T HT Tamil
Feb 28, 2024 06:30 AM IST

எதையும் சாதிக்கும் மனோதிடம், தன்னம்பிக்கை மற்றும் வைராக்யம் உண்டாக, திருஷ்டி போன்ற பாதிப்பு அனைத்தும் தீர, இவரை வழிபடுவர்.

கருடாழ்வர்
கருடாழ்வர் (@Namma_Mayan)

ஒருவர், தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு, தன் சக்தியில் ஒரு துளியை, கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அதிகாலை சூரிய உதயத்தின் போது, கருடனை தரிசிப்பது நினைத்த காரியம் நடைபெற உதவும். வியாழக்கிழமை, பஞ்சமி திதியில், சுவாதி நட்சத்திரத்தில், கருட பஞ்சாங்கத்தை படிப்பார்கள். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம் என்பார்கள்.

திருப்பதி பிரம்ம உற்சவத்தில், கருட வாகனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். கருட சேவையின் போது, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் இருந்து வரும் துளசி மாலை, மூலவருக்கு அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூலவரின் தங்கச் சங்கிலி, மகர கண்டி ஆகியவை, கருட சேவையின் போது மட்டும் உற்சவமூர்த்தியான மலைப்பசாமிக்கு, அணிவித்து மகிழ்வார்கள்.

தாயில்லாமல் நானில்லை, அம்மா என்று அழைக்காத உயிரில்லை, கடவுளின் கண்கள் நீ, கண்கள் நீயே தாயே காற்றும் நீயே, என்றெல்லாம் வர்ணனை செய்து கவிகள் போற்றும் அன்னை மீது, அதிக பற்றும், பாசமும்,‌ நேசமும் கொண்டவர் கருடன்.

நாகர்களுக்கு தாயாக விளங்கும் கத்ருவும், அருணனையும், கருடனையும் தாயாகக் கொண்ட வினதையும், காசிப முனிவரின் மனைவிகள் ஆவர். கத்ரு, வீம்பு கொண்டவள். ஒரு சமயம் வினதையிடம் போட்டி வைத்து, சூழ்ச்சியால் வென்று, அவளை, அடிமைப்படுத்த நினைத்தாள்.

அதன்படி, இந்திரனின் குதிரை உச்சைஸ்வரஸ் என்ன நிறம் என்று கத்ரு கேட்க, அதற்கு வினதை வெள்ளை நிறம் என்று சொல்ல, கத்துருவோ இல்லை கருப்பு நிறம் என்று சொல்ல, இந்த போட்டியில் ஜெயித்தவர்க்கு தோற்றவர் அடிமை எனும் நிபந்தனை வைத்து, கருப்பு நிறமாக மாற்றத் தன் மகன் கார் கோடன் என்ற கருநிற பாம்பை குதிரையின் வாலில் சுற்றிக்கொள்ள பணித்து, அதே போல, கார்கோடன் செய்ய, பாம்பு சுற்றிய வால் கருப்பு என்று காட்டி வினதையை அடிமை ஆக்கினார். வினதை அடிமையானதால், அவரது மகன்கள், அருணனும், கருடனும் கூட அடிமையாக ஆயினர்.

தாயின் அடிமை நீக்க வழி கேட்ட கருடனிடம், கத்ரு, தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், அவரின் தாய்க்கு விடுதலை என்றாள். கருடன் தேவலோகம் சென்று,தான்,தனது, தாயாரின் அடிமைத்தனத்தை போக்கவே அமிர்தம் கொண்டு போக வந்தேன், அதை நீங்கள் மறுபடியும் எடுத்துக் கொண்டு வந்து விடலாம் என்று கூறி, அனுமதி கேட்டு,தன்னை வழிமறித்த,இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு மதிப்பு அளித்து,தன் ஒரு சிறகை அர்ப்பணித்தார் கருடன்.

இந்திரன் மகிழ்ச்சியடைந்து, அமிர்தம் கொடுக்க, அதை, கத்ருவிடம் கொடுத்து, தன் தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார் கருடன்.

எதையும் சாதிக்கும் மனோதிடம், தன்னம்பிக்கை மற்றும் வைராக்யம் உண்டாக, திருஷ்டி போன்ற பாதிப்பு அனைத்தும் தீர, இவரை வழிபடுவர். கருடப்பஞ்சமி இவருக்குரிய நன்நாள்.

மகாபாரத போரின் கடைசி நாள் கருட வியூக யுத்தமே பாண்டவர்களுக்கு வெற்றி தந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்க மன்னர் ஆண்டாளுடன் கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது சிறப்பு. இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வார், திருக்கண்ணங்குடியில், ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பது போல் ,இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு,காட்சி தருகிறார்‌. ஆழ்வார் திருநகரியில், நவ கருடன் சேவை சிறப்பாக இருக்கும்.

திருமாலைப்போல, அணிமா, மகிமா, லஹிமா, கரிமா, இசித்துவம், வசித்துவம், பிரபாதி, பிராபாம்யம் ஆகிய எட்டு சம்பத்துகளாக இருந்து, பக்தர்களுக்கு அதை அளிப்பவரான கருடாழ்வார் மட்டுமே இறக்கைகளை அசைக்காமல் பறக்கும் சக்தி கொண்டவர். ஆலய கும்பாபிஷேக சமயம், வானத்தில் கருடன் வட்டமிட நாடு சுபிட்சம் பெறும்.

துன்பம் நீங்க கருட மாலா மந்திரம் பாராயணம் செய்வர். மரகத பச்சை கல்லுக்கு கருடோத்காரம் என்ற பெயர் உண்டு.பட்சி ராஜாவான, இவரது குரல் சாமவேத த்வனி என்பார்கள். இவரை, பெரிய திருவடி என்பர். கருட தண்டகம் போன்ற ஸ்லோகங்கள் இவரின் சிறப்பை கூறும்.

கருட புராணம் ,இதில், மனிதர்கள் செய்த பாவத்திற்கு, அவர்கள் இறந்த பின், அனுபவிக்கும் தண்டனைகள் பற்றி, உள்ளது. பகவத் கீதையில், கிருஷ்ண பகவான், பறவைகளில் நான் கருடன் என கூறுவார்.

ஒரு சமயம், வாலகில்ய முனிவர்கள் தவத்தில் இருக்கும் பொழுது,இவர், ஒரு மரத்தில், தலைகீழாக தொங்கிக்கொண்டு, அவர்களைக் காத்து நின்று, காப்பாற்றியதால், எதையும் தாங்கும் சக்தி படைத்தவன் என்று பொருள்பட "கருடன்" என்று மகிழ்வுடன் பெயர் சூட்டினார்கள்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்