Vilakku Pooja: விளக்கில் இத்தனை பெருமைகளா? - சிவபெருமான் வீற்றிருக்கும் விளக்கு..!
விளக்கின் ஐந்து முகங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆகும்.
தீபத்தின் மூலம் இறைவனைக் காணலாம் என ஆன்மீகம் கூறுகிறது. விளக்கேற்றி வழிபட்டால் இருள் விலகி வாழ்வில் ஒளி பெறலாம் எனக் கூறப்படுகிறது. ஐந்து முகங்கள் கொண்ட திருவிளக்கில் சிவபெருமானின் ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது.
அந்த ஐந்து முகங்களும் சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தீப வழிபாடுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.
குரு பகவான் விளக்கு
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் குரு பகவான் காட்சி தரும் ஆலங்குடி அமைந்துள்ளது. பரிகார ஸ்தலமாக விளங்கும் இந்த கோயிலில் நான்கு விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு, பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வழிபட்டால் குரு தோஷம் விலகும் எனக் கூறப்படுகிறது.
எலுமிச்சை விளக்கு
எலுமிச்சை பழத்தை இரண்டாகப் பிளந்து விட்டு சாறு பிழிந்து உள்ளே இருக்கும் சக்கையை நீக்கிவிட்டு அதை விளக்காக்கி நெய் இட்டு ராகு கால நேரத்தில், துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் வாழ்வில் இருக்கும் சிக்கல்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
கோயில்களில் விளக்குப் பூஜை
கோயில்களில் செய்யப்படும் விளக்குப் பூஜை மிகவும் சிறப்பாகும். குறிப்பாக அம்மன் கோயில்களில் செய்யப்படும் விளக்குப் பூஜை அதிக அருளைத் தரும் எனக் கூறப்படுகிறது. மாங்காடு மாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களைக் குறிப்பிடலாம். இந்த கோயில்களில் நடக்கும் விளக்கு பூஜை மிகவும் சிறப்பாகும்.
சனிபகவான் விளக்கு
செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களைக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளை வைத்து கருப்பு துணியால் மூட்டை கட்டி, அதே துணியின் முனையைத் திரியாக மாற்றி சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் சனி தோஷம் விலகும் எனக் கூறப்படுகிறது.
நவக்கிரக விளக்கு
திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பஞ்சலி என்ற கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. அதற்குப் பதிலாக அந்த கோயிலில் ஒன்பது குழிகள் இருக்கும். இந்தக் 9 குழிகளில் நெய் ஊற்றித் திரி இட்டு விளக்கேற்றி ஒன்பது சுடர்களை வழிபடுவதை நவகிரக தீப வழிபாடு எனக் கூறுகிறார்கள். இதன் மூலம் நவக்கிரக தோஷம் விலகும் எனக் கூறப்படுகிறது.