Magaravilakku Pooja: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜை தொடக்கம்! உறசவ விழா தேதியும் அறிவிப்பு
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் இன்று முதல் வரும் ஜனவரி 15ஆம் தேதி வரை ஐயப்ப சுவாமிக்கு முக்கிய வழிபாடான மண்டல பூஜை நடைபெறும் எனவும், உற்சவ திருவிழா ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு மஹோத்சவம் தொடங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
இதுகுறித்து, கோயிலின் நிர்வாக மேலாளர் அனிஷ்குமார் வெளியிட்ட செய்திகுறிப்பில், "மண்டல மகரவிளக்கு பூஜை, வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) தொடங்கியுள்ளது. இதையொட்டி, மகாலிங்கபுரம் ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை அணிந்து கொள்ளலாம். காலை 5.30 மணியில் இருந்து இருமுடி கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருமுடி கட்டுவதற்கு முன்பாக உரிய முன்பதிவுகளை கோயிலின் டிக்கெட் கவுண்டரில் செய்து கொள்ள வேண்டும். பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளவும், இருமுடி கட்டிக் கொள்ளவும் தேவையான மாலை, வேஷ்டி, துண்டு, வெள்ளி மாலை ஆகிய அனைத்தும் கோயில் வளாகத்திலேயே கிடைக்கும்.
நவம்பர் 17ஆம் தேதியான இன்று தொடங்கி மகர விளக்கு காலம் வரையிலும் கோயிலில் தினமும் மாலை 6.40 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் கற்பூர ஜோதி ஏந்தி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிகழ்வுக்கு பிறகு தினமும் கலை கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும். மாலையிட்டு, இருமுடி கட்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல மகர விளக்கு மஹோத்சவத்தை ஒட்டி, ஆண்டுதோறும் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நடைபெறும் உற்சவத் திருவிழா, இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நடக்கவுள்ளது.
இதற்காக, டிசம்பர் 27ஆம் தேதியன்று கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பள்ளி வேட்டை ஜனவரி 2ஆம் தேதியும், ஆராட்டு நிகழ்வு ஜனவரி 3ஆம் தேதியும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 4ஆம் தேதியன்று கலபாபிஷேகத்துடன் உற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறும். ஜனவரி 15ஆம் தேதி வரை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு முக்கிய வழிபாடான மண்டல பூஜை நடைபெறும். இதற்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்