Spiritual Tips: குளிக்காமல் சாமி கும்பிடலாமா?..ஆன்மிகம் அறிவோம்!
ஆன்மிக அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனை நல்வழிப்படுத்தக்கூடிய முக்கிய விஷயங்களில் முதலாவதாக இருப்பது ஆன்மிகம். ஒருவர் எந்த ஒரு கடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம். தூய்மையான சிந்தனையோடு வழிபடுவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைத்தான் எல்லா மதமும் வலியுறுத்துகின்றன.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால், அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்று சொல்வதுண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து வந்தாலே நல்லதே நடக்கும்.
ஆன்மிகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, நாள்முழுவதும் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கும்படி பெருமையாக கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், பிறருக்கு கெடுதல் நினைக்காமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மிகம் தான்.
அந்த வகையில், ஆன்மிக அன்பர்களுக்கு உதவும் வகையில் சில பயனுள்ள தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
- வில்வ மரத்தில் மகாலட்சுமி இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமைகளில் வில்வ இலைகளை பறிக்கக் கூடாது.
- வில்வ மரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமம். மகாலட்சுமியின் கைகளில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வாமனபுராணம் கூறுகிறது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்த பின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும்.
- கட்டடப்பணி எளிதில் முடிய முருகப்பெருமான், அங்காரக பகவானை வழிபடலாம். முருகப்பெருமான், அங்காரக பகவானுக்கு (செவ்வாய்) சிவப்பு நிற பூக்களால் செவ்வாய் கிழமைகளில் அர்ச்சனை செய்யுங்கள். தினமும் காலை, மாலை வேளைகளில் கந்த சஷ்டி கவசம் கேட்டு வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- மஞ்சள் கயிறு இன்றி தங்கச்சங்கிலியில் தாலி அணியலாமா என்றால் திருமணத்தின் போது மாங்கல்ய தந்துனானேன என்ற மந்திரம் சொல்லும் போது மணமகளுக்கு தாலி கட்டப்படும். இதில் தந்து என்பதற்கு நூல் கயிறு என்பது பொருள். எனவே தங்கச்சங்கிலியுடன் மஞ்சள் கயிறும் சேர்ந்திருப்பதே சிறப்பு.
- நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் வழிபாடு செய்யனுமா என்று கேட்டால் இல்லை. எந்த நாளிலும் செய்யலாம். குறிப்பிட்ட பரிகாரம் செய்பவர்கள் அதற்குரிய கிழமை நட்சத்திரங்களில் செய்ய வேண்டும். உதாரணமாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு, நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.
- குளிக்காமல் சுவாமி கும்பிடலாமா என்று கேட்டால் காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவு நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை. ஆனால், காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோயில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும்.
- பூஜையின் போது பிரசாதமாக கற்கண்டு, உலர்திராட்சை, பேரிச்சம்பழம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து பூசிப்பது அவசியம்.
- கடவுளின் உருவத்தை வாசலில் கோலமாக போடலாமா என்று கேட்டால் கோலமாக இடக்கூடாது. கடவுளின் உருவத்தை நாம் காலால் மிதிப்பது பாவம்.
- முன்னோர்கள் படத்தை தெற்கு நோக்கித் தான் வைக்க வேண்டும் என்ற காட்டாயம் எல்லாம் கிடையாது. கிழக்கு நோக்கியும் வைக்கலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்