Yogam: ‘தர்மகர்மாதிபதி யோகம் முதல் கஜகேசரி யோகம் வரை!’ வாழ்கையில் எல்லா சந்தோஷங்களை தரும் டாப் 3 யோகங்கள்!
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம், சேர்க்கை உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன.
ஜோதிட சாஸ்திரத்தில் நூற்றுக்கணக்கான யோகங்கள் உள்ளடக்கி உள்ளன. இந்த யோகங்கள் ஒரு மனிதனின் வாழ்வியலில் வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதார வெற்றி, நீண்ட ஆயுள், மரியாதை போன்றவற்றை தரக்கூடியவை.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம், சேர்க்கை உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.
தர்மகர்மாதிபதி யோகம்
இந்த நூற்றுக்கணக்கான யோகங்களில் மிகப்பெரும் கோணத்திற்கு அதிபதியான 9ஆம் அதிபதியும், மிகப்பெரும் கேந்திரத்திற்கு அதிபதியான 10ஆம் அதிபதியும் ஒரு ஜாதகத்தில் இணைந்து இருப்பது, ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்வது, ஒருவர் மட்டும் இன்னொருவரை பார்ப்பது, இவர்களில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்ற நிலையில் மற்றவரோடு தொடர்பு கொள்வது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும். இது இருப்பதிலேயே முதன்மையான ராஜயோகம் ஆகும்.
உதாரணமாக மீனம் லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இவர்களுக்கு 9ஆம் அதிபதியான செவ்வாய் மற்றும் 10ஆம் அதிபதி குரு ஆகியோர் உள்ளனர். மேலும் இவர்களுக்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், குரு பகவான் தனாதிபதியாகவும் உள்ளனர். இவர்களில் செவ்வாய் மேஷம் ராசியிலும், குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சியிலும் பெற்று 5ஆம் பார்வையாக செவ்வாய் பகவானை பார்க்கிறார் எனில் இது ஒரு முதல் தர தர்மகர்மாதிபதி யோகமாக இருக்கும். இதன் மூலம் சமுதாயத்தில் முன்னேற்றமும், வளர்ச்சியும் தரக்கூடிய யோகமாக இருக்கும்.
சிவராஜ யோகம்
சூரியன் வலுப்பெற்ற நிலையில் குரு உடன் தொடர்பு பெறும் போது உண்டாகும் சிவராஜ யோகம் மிக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் சூரியன் ஆட்சி, உச்சம், திக்பலம் ஆகிய நிலைகளில் குரு உடன் இணைந்து இருப்பது அல்லது குரு பார்வை பெறுவதன் மூலம் சிவராஜ யோகம் உண்டாகும்.
அரசியலில் மிகப்பெரியவெற்றி, அதிகார பதவிகளில் செல்வாக்கு, மற்றவர்களை அரவணைத்து செல்வது, மன்னர் போன்ற வாழ்கையை வாழ்வது உள்ளிட்ட நன்மைகளை இந்த சிவராஜ யோகம் ஏற்படுத்தி தரும்.
குருசந்திர யோகம்
சந்திரனும், குருவும் இணைந்த நிலையில் கிடைக்க கூடிய கஜகேசரி யோகம் எனப்படும் குரு சந்திர யோகம் முக்கியமான யோகங்களில் ஒன்றாக உள்ளது. அதாவது சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமர்ந்து ஆட்சி உச்சம் பெற்றாலும், குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் அமர்ந்து ஆட்சி உச்சம் பெற்றாலும் அல்லது இருவரும் இணைந்த நிலையில் யாராவது ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலும் இந்த யோகம் உண்டாகின்றது.
உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பலவித தோஷங்கள், குற்றங்கள், அவமரியாதை, கெடுதல், சூழ்ச்சிகளை நீக்கும் தன்மையை இந்த யோகம் உண்டாக்கித் தரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.