Ram Temple: ‘அயோத்தி ராமர் கோயில் தெரியும்! மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் தெரியுமா?’ இத்தனை சிறப்புகளா?
“Ram Temple: தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில், ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில், வடுவூர் கோதண்ட ராமர் கோயில், கும்பகோணம் - பட்டாபிஷேக ராமர் கோயில், திருப்புல்லாணி - தர்பசயன ராமர் கோயில் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது”
அயோத்தி ராமர் கோயிலில் இன்று பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ராமர் கோயில்களின் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்
அயோத்தி ராமர் கோயில்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இன்று பிற்பகல் 12 மணியளவில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுக்காக நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தி உள்ளார். அரசியல், வணிகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு மிக முக்கிய பிரபங்களுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட சன்னதியாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலானது ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் கருடன் ஆகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைப் பயன்படுத்தி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கட்டட கலை பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டுள்ளது. நிருத்திய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்களை கொண்டுள்ள ராமர் கோவிலின் கருவறையில், குழந்தை ராமர் (ராம் லல்லா) சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில்
தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில், ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில், வடுவூர் கோதண்ட ராமர் கோயில், கும்பகோணம் - பட்டாபிஷேக ராமர் கோயில், திருப்புல்லாணி - தர்பசயன ராமர் கோயில் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது.
குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டம் மதுரந்தகத்தில் அமைந்துள்ள ஏரிகாத்த ராமர் கோயில் சிறப்பு வாய்ந்தது.
திருமண கோலத்தில் காட்சி தந்த ராமர்
இராவணன் பிடியில் இருந்த சீதையை மீட்பதற்காக இலங்கையை நோக்கி சென்ற ராமர் மதுராந்தகத்தில் இருந்த விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்ததாக ஐதீகம். முனிவரின் வேண்டுகோளின்படி போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பி ராமர், சீதை உடன் திருமண கோலத்தில் காட்சி அளித்தார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் பல்லவ அரசனான ராஜ சிம்மவர்மன் காலத்தில் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.
திருக்கோயிலில் மூலவரான ஸ்ரீராமர் தனது வலது கையில் வில்லை ஏந்தியபடி 8 அடி உயரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உடன் உள்ள சீதா பிராட்டியார் சிலையின் கையில் தாமரை மலர் ஏந்திய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடன் லட்சுமணர் சிலையும் உள்ளது.
அத்தி மரத்தில் செய்யப்பட்ட சிலைகள்
இந்த விக்ரகங்கள் அனைத்தும் அத்தி மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தாலும் பார்ப்பதற்குக் கல்லில் வடித்த சிலை போன்ற தோற்றத்தை அளிக்கிறது. மேலும் கருவறையிலேயே விபண்டக முனிவருக்கு தனி சன்னிதி உள்ளது. கோயிலின் வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதியும் உள்ளது.
ஏரியை காத்த ராமர்
ஆங்கிலேயர் காலத்தில் பெரு மழை பெய்ததால் நிரம்பிய மதுராந்தகம் ஏரி உடைந்து ஊரே அழியக்கூடிய நிலை இருந்ததாகவும், ஊரை வெல்லச் சேதத்திலிருந்து காக்குமாறு ஸ்ரீ ராமபிரானிடம் பக்தர்கள் வேண்டிய நிலையில் ஏரி உடையாமல் பாதுகாப்பான நிலைக்கு சென்றதால் ஏரி காத்த ராமர் என்ற பெயர் இக்கோயிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அரக்கியை மிதிக்கும் ஆஞ்சநேயர்
இந்த ஆலயத்தின் தல மரமாக மகிழமரம் உள்ளது. கோயிலில் சங்கு சக்கர சின்னங்களுடன் அனுமனும், ராம லக்ஷ்மரை தோளில் சுமந்தபடி அரக்கியைக் காலால் மிதிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.
ஆஞ்சநேயரின் பின்புறம் ராம லக்ஷ்மரின் பாத தரிசனத்தையும் காண முடிகிறது. ஏரி காத்து ராமரை வழிபடுபவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோயிலின் பின்புறம் வருண புஷ்கரணியும் அதன் நடுவே தீர்த்தவாரி மண்டபமும் அழகுற அமைந்துள்ளது.