Astro Tips : எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.. பித்ரு தோஷம் ஏற்பட முக்கிய காரணம் இதோ.. ஆன்மீக சொற்பொழிவார் விளக்கம்!
Astro Tips : இளமையில் அவர்கள் செய்ததற்கு அவர்களின் முதுமை காலத்தில் நாம் செய்ய வேண்டும் என்பது கடமை. இந்த கடமையை நாம் சரியாக செய்யவில்லை என்றால் நமக்கு பின் நாட்களில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என நிறைய பிரச்சனைகள் வரக்கூடும் என்று சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி அதில் தெரிவித்துள்ளார்.

Astro Tips : எந்தப் பாவத்திற்கு எங்கு போயும் பிராயச்சித்தம் தேட முடியாது. எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று உங்களுக்கு தெரியுமா. இது குறித்து ஆத்ம ஞான மையம் youtube சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி குறிப்பிட்டுள்ள விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம். இந்த காணொலி கடந்த டிசம்பர் மாதம் 22தேதி வெளியாகி உள்ளது.
வாழ்வில் எந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று பார்த்தால் அதில் தலையாய பாவம் என்ன என்றால் தாய், தந்தையரை வயதான காலத்தில் நிராகரிக்கின்ற பாவத்திற்கு எங்குமே பிராயச்சித்தம் உங்களால் தேட முடியாது. இன்றைய தலைமுறையினருக்கு இதை திரும்பத் திரும்ப பதிவு செய்ய வேண்டிய ஒரு தகவலாக இருக்கிறது. ஏற்கனவே இதுகுறித்து நிறைய சொல்லி உள்ளேன்.
நமது கடமை
இந்த உலகத்திற்கு நாம் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் நமது தாயும்.. தந்தையும்.. இந்த தாயும் தந்தையும் இல்லாமல் நாம் இந்த உலகில் கிடையாது என்பதை முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். அந்த தாய்க்கும் தந்தைக்கும் நாம் செய்ய வேண்டியது நமது கடமை. அது ஆணாக ,பெண்ணாக இருந்தாலும், பெற்றோர்களை கவனிக்க வேண்டும் என்பது நம் கடமை. நம் பெற்றோர்கள் இளமையில் நம்மை எப்படி எல்லாம் கவனித்தார்கள். அவர்கள் இளமையில் நம்மை சிறிது சோம்பேறித்தனம் அடைந்து கவனிக்காமல் விட்டிருந்தால் நாம் இந்த நிலைக்கு வந்து இருப்போமா.. நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இந்த ஊசியை இந்த மாதத்தில் இந்த தேதியில் போட வேண்டும் என நாம் பிறக்கும் போது ஒரு பெரிய லிஸ்ட் இருக்கும். அதை படிக்கத் தெரிந்த அம்மாவாக இருந்தாலும், படிக்கத் தெரியாத அம்மாவாக இருந்தாலும் காலண்டரில் அந்த தேதியை பார்த்துக் கொண்டே இருப்பார். யார் இருந்தாலும், யார் இல்லை என்றாலும், அவர் அந்த தேதியில் தன் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஊசியை போட்டு விடுவார். அந்த குழந்தைக்கு ஜுரம் வந்தாலும் அதையெல்லாம் சரி பண்ணி அந்த குழந்தையை காப்பாற்றுகிறார். அப்படி இளமையில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். எந்த தாயாவது இளமையில் நமக்கு போடக்கூடிய ஊசியை கூட தள்ளிப் போட்டு இருக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த ஊசியை ஒழுங்காக போடவில்லை என்றால் இந்த நோய் வந்துவிடுமோ என்று பார்த்து பார்த்து பக்குவமாக நம்மை பேணிப் பாதுகாத்து வளர்க்கின்றனர்.
அந்த தாயையும், தந்தையையும் வயோதிக காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை பிள்ளைகளுக்கு இருக்கிறது. அது கடமை தானே.. சிலர் நினைக்கலாம் நாங்கள் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்துக் கொள்ள அவர்களுக்கு பணம் வருகிறது. அவங்களே அவர்களை பார்த்துக் கொள்ளப் போகிறார்கள். எங்கள் அண்ணன் பார்த்துக் கொள்வார். எனது தம்பி பார்த்துக் கொள்வார். என் தங்கச்சி பார்த்துக் கொள்வார் நானே ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேட்கலாம். ஏன் நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் நமக்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது.
எத்தனை குழந்தைகளை ஒரு தாய் பெற்றாலும் அத்தனை குழந்தைகளும் தன்னை வயது முதிர்ந்த காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அந்த தாய்க்கு நியதி. பத்து பிள்ளை பெற்றாலும் அந்த தாய் சரியாக தானே கவனித்தார். அதேபோல நாமும் அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள் நன்றாக வாழ்ந்த காலத்தில் அவர்களிடமிருந்து எல்லா உழைப்பையும் சுரண்டிக் கொண்டு அவர்களின் ஆரோக்கியத்தை நமக்காக கெடுத்துக்கொண்டு வேலை செய்தார்கள். அதை எல்லாம் வாங்கிக் கொண்டு அவர்களை சொத்தை எல்லாமும் வாங்கிக் கொண்டு, அதன் பிறகு அவர்களை வேண்டாம் என்று நிராகரிப்பது எந்த அளவிற்கு நியாயமாக இருக்கும் என்று கண்ணை மூடி ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். ஆக வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று அவர்களை விடுவது மிக மிக ஒரு கேவலமான ஒரு விஷயம் அவர்களை நம்மோடு வைத்து பேணிப் பாதுகாத்து அவர்களுக்கு செய்ய வேண்டிய சரியான வாழ்க்கை முறைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் என்ன நிலையில் வாழ்கிறீர்களோ அதே வாழ்க்கையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அவர்களை முறையாக கவனித்து அவர்களுக்கு உண்டான மரியாதையோடு வாழ வைக்க வேண்டும். பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அவர்களுக்கு செய்ய வேண்டியது நமது கடமை.
பித்ரு தோஷம்
பெற்றோர்கள் எனது அண்ணனுக்கு தான் சாதகமாக இருப்பார்கள். எனது சகோதரிக்கு தான் சாதகமாக இருப்பார்கள் என்பது போன்று சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால் பெற்றோர்கள் உங்களுக்கு செய்கிறார்களோ, செய்யவில்லையோ உங்களை கவனித்தார்களோ கவனிக்கவில்லையோ இளமையில் அவர்கள் செய்ததற்கு அவர்களின் முதுமை காலத்தில் நாம் செய்ய வேண்டும் என்பது கடமை. இந்த கடமையை நாம் சரியாக செய்யவில்லை என்றால் நமக்கு பின் நாட்களில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். எப்போதும் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை யார் ஒருத்தர் சரியாக செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த பாவமும் வராது. அவர்களுக்கு நல்ல புண்ணிய வாழ்வு நிச்சயமாக கிடைக்கும் என்று சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்