Murugan Worship : முருகப் பெருமானுக்குரிய 3 முக்கிய விரதங்கள் பற்றி தெரியுமா?
முருகப் பெருமானுக்குரிய மூன்று முக்கிய விரதங்கள் பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை பற்றி இங்கு காண்போம்.
முருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று வகைகளாக அனுசரிக்கப்படுகிறது. அவை வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகும்.
வார விரதம்:
ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமானைப் பூசித்து வழிபட்டு விரதமிருப்பது வார விரதமாகும்.
நட்சத்திர விரதம்:
ஒவ்வொரு மாதத்திலும் வருகிற கார்த்திகை நட்சத்திரதினத்தன்று அனுசரிக்கப்படுவது நட்சத்திர விரதமாகும்.
திதி விரதம்:
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறைச் சஷ்டி அன்று மேற்கொள்வது திதி விரதமாகும். முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள் இந்த நாள்தான்.
ஐப்பசி மாதம் வளர்பிறச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த நாளில்தான் விழாவை நடத்த வேண்டும் என்பது ஸ்கந்ததோத்சவ விதிப் படலத்திலும், கெளசிகப் பிரசன குமாரதந்திரத்திலும் கூறப்பட்டிருக்கிறது. சைவர்கள் பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வருகிற வளர்பிறைச் சஷ்டியிலும், கார்த்திகை நட்சத்திரத்திலும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
சிறப்பாக ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் ஆறு நாட்கள் உணவருந்தாமல் இருந்து விரதத்தை அனுசரிக்கின்றனர். இந்த ஆறு நாட்களிலும் முருகன் புகழ் நூல்களான திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தசஷ்டி கவசம் முதலிய நூல்களை ஆசாரத்துடன் ஓதிவரும் வழக்கமும் நம் நாட்டில் இருந்து வருகின்றது. இதுமட்டுமின்றி கந்தபுராணம், கந்தபுராணச் சுருக்கம் இவைகளையும் பெரியோர்கள் படிக்கச் சொல்லி கேட்டும், தாமே படித்தும் விரத நாட்களைக் திளைப்பதும் உண்டு.
மேற்சொன்ன எல்லாவகை விரத நாட்களிலும் மக்கள் காலையில் நீராடி நித்தியக் கடன்களை முடித்து, ஆலயம் சென்று முருகப் பெருமானை வழிபட்டால் இம்மையில் எல்லா நன்மைகளையும் பெற்று மறுமையில் பேரானந்தப் பெருவாழ்வைப் பெறுவார்கள் என்று கந்தபுராணம் கூறுகிறது.
கந்தபுராணம் நம்முடைய சொந்தபுராணம். நம்மிடம் உள்ள சூரபத்மாதியாரன ஆணவ, கன்ம, மாயை ஆகிய மலங்களில் உழன்று, அல்லற்படாமல் அவைகளினின்றும் விடுபட்டு வீடடைய வேண்டுமென்ற தத்துவத்தையே கந்தபுராணம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகையால் நாம் எல்லோரும் கந்தசஷ்டி விரதத்தை முறைப்படி அனசரித்து பெருங்கருணைப பெருங்கடலான முருகனின் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்