கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும்?.. விரதத்தின் சிறப்பம்சங்கள், பலன்கள் என்ன? - முழு விபரம் இதோ..!
கந்த சஷ்டி விரதம் உருவான வரலாறு, சஷ்டி விரதத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று போரில் வெற்றி பெற்ற நிகழ்வே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு முருகனின் அறுபடை வீடுகளில் 2 ஆம் வீடான திருச்செந்தூரில் நடந்தது. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்கள் ஆகும். இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
எப்படி விரதம் இருக்க வேண்டும்?
கந்த சஷ்டியின் போது இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் பருகி ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. காலை, மதியம், இரவு என ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு மீதமுள்ள 2 வேளையும் சாப்பிடாமல் விரதத்தை கடைபிடிப்பார்கள். ஆறாம் நாளான கந்த சஷ்டி அன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். கடும் விரதம் இருக்க முடியாதவர்கள் முதல் 5 நாட்களும் இரவு ஒருவேளை பால் அல்லது பலகாரம் உண்டு இறுதி நாள் முழு விரதத்தை கடைபிடிக்கலாம்.
குழந்தை பாக்கியம்
குழந்தை செல்வம் இல்லாதவர்கள் முருகனை நினைத்து கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டால் அந்த முருகப் பெருமானே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம். இதைத்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வசிஷ்ட முனிவரிடம் இருந்து இவ்விரதத்தை பற்றி அறிந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி, முனிவர்கள், தேவர்கள் என பலரும் கடைபிடித்துள்ளனர். 'செகமாயை உற்று' என்று தொடங்கும். சுவாமி மலைத் திருப்புகழில் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்த திருப்புகழை தினமும் பாராயணம் செய்தால் நல்ல குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் வேண்டி கந்த சஷ்டி விரதம் இருக்கலாம் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து நோயிலிருந்து விடுபடலாம். செல்வம் பெருக வாழ்க்கையில் பிரச்னை உள்ளவர்கள் தொழில் விருத்தி அடைய, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்கு பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த கந்த சஷ்டி விரதம் நிச்சயம் பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நாட்களில் கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவொண்பா போன்ற நூல்களில் ஏதாவது ஒன்றைபாடுவது அவசியம். மேற்சொன்னபடி விரதத்தை கடைபிடித்தால் முருகப் பெருமானின் அருளால் பாவம் பறந்தோடிவிடும், துன்பம் விலகிவிடும், நன்மைகள் பல கிடைக்கும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்