தமிழ் செய்திகள்  /  Astrology  /  A Temple To Be Worshiped To Get The Blessing Of Marriage And Child

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

Manigandan K T HT Tamil
Feb 27, 2024 06:40 AM IST

அன்றய தினம் தேவியை வேண்ட, நீண்ட ஆயுள், திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருமண வைபவம்
திருமண வைபவம் (Freepik)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விரதத்தை முருகப் பெருமானுக்கு உரிய விரதமாக கொள்வார்கள். ஒரு பிரளய காலத்தில், உலக உயிர்கள் அழிவிலிருந்து தப்பிக்க, உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும், ஒரு கும்பத்தில் வைத்து, அதை நீரில் மிதந்து வரச் செய்தனர். சிவபெருமான் அந்த கும்பத்தை, அம்பால் உடைக்க, கும்பத்தின், மூக்குப்பகுதி உடைந்தது. அது விழுந்த இடம் கும்பகோணம் திருத்தலம். அங்கு "மாசிமஹாமகம்" பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக சிறப்பாக நடக்கும்.

சிம்ம ராசியில் குருவும், சந்திரனும் இருக்கும் போது, கும்ப ராசியில், சூரியன் சஞ்சரித்து, சந்திரனையும் குருவையும் பார்க்கும் பொழுது மாசி மகாமகம் வரும். மற்ற மாதங்களில் வரும் மாசி மக நட்சத்திரத்தில், வழிபாடுகளை மேற்கொண்டால், நல்ல வாழ்க்கை அமையும்.

மாசி மகத்தில், தீவிர சிவ பக்தனான, திருவண்ணாமலை ராஜாவிற்கு, குழந்தைப் பேறு இல்லாததால், அவருக்கு இறுதிக்கடன்கள் செய்ய, குழந்தை வடிவில், இறைவனே வந்து செய்தார். அப்போது எவர் இந்நாளில் சமுத்திர ஸ்நானம் செய்கிறாரோ, அவருக்கு மோட்சம் கிடைக்கும் என்று பகவான் அருளினார். இந்நாளில் வருடாவருடம், சிவனார், ராஜாவுக்கு தர்ப்பணம் செய்ய வருகிறார் என்பது ஐதீகம்.

கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி கோயிலில் மாசி மக திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்று. அன்றய தினம் தேவியை வேண்ட, நீண்ட ஆயுள், திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சூரிய பகவானின் அதி தேவதை சிவன். சந்திரனின் அதிதேவதை பார்வதி. ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன், பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன், இதுதான் மாசி மக பௌர்ணமி நாளின் சிறப்பு அம்சமாகும். சிவசக்தி ஸ்வரூபத்தை வணங்க ஏராளமான நன்மைகள் நம்மைத் தேடிவரும் என்பார்கள்.

வருண பகவானுக்கு சிவன் சாப விமோசனம் தந்த நாள், பார்வதி தேவியார் தாட்சாயணியாய் அவதரித்த நாள், பாதாளத்தில் இருந்த பூமியை, பெருமாள் வராக அவதாரம் எடுத்து கொண்டு வந்த நாள், மாசி மக நாளில் சிவன், விஷ்ணூ, பித்ருக்கள் அனைவரையும் வணங்க, சகல நன்மைகளைப் பெறலாம். சிவ விஷ்ணு முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த நன்னாள் இது .தோஷம், பாவம் போக்கும் புண்ணிய நாளாகும்.

மகம் நட்சத்திரத்தின் அதி தேவதை பித்ருக்கள். மாசி மகத்தன்று பித்ருக்கள் வழிபாடு,முன்னோர்களின் ஆசியைக் கொணரும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற பல தலங்களில் இன்று முன்னோர் நினைவு பிதுர் கடன் நடைபெறும்.

நீர்நிலைகளில் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி, கோதாவரி, பொருநை, சரயு ஆகிய நதிகள் கலந்து ஸ்நானம் செய்வோர்க்கு புண்ணியம் நல்கும் இப் பெருவிழா நீராடலை, நம் முன்னோர் "கடல் ஆடும் விழா" என அழைத்தனர். வடக்கில் இதை "கும்பமேளா" என்பர்.

பித்ரு தேவதா நட்சத்திரம் எனப்படும்,இதைப் போற்றி புறநானூறு, மதுரைக் காஞ்சி, மயிலாப்பூர் பதிகம் போன்ற பல நூல்களும், திருச்செந்தூர் உட்பட பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளும் சான்றாக இதன் தொன்மை பற்றி பறைசாற்றும்.

மாசிமக விழா மற்றும் விரதங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல் வேறு ஆலயங்கள், இந்தியாவின் பல மாநிலங்கள் தவிர, வெஸ்டர்ன் ஆஸ்ட்ரேலிய பெர்த் பால முருகன் கோயில், கலிஃபோர்னியோ, அமெரிக்கா போன்ற பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது என்கின்றனர். இப்பெரு விழாவில் தவறாது கலந்து கொண்டு இறைவனது அருளை வேண்டுவோம்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்