L Murugan: நீலகிரியில் பேக் அடித்த எல்.முருகன்! ராஜ்யசபாவுக்கு போட்டி! பயம் இல்லை என பேட்டி!
Feb 14, 2024, 01:50 PM IST
“தலைமை சொன்னதால் நீலகிரி தொகுதிக்கு பொறுப்பாளராக மட்டுமே இருந்து வந்ததாகவும், பயத்தின் காரணமாக போட்டியில் இருந்து விலகவில்லை என்றும் எல்.முருகன் விளக்கம்”
பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் மத்தியப்பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை எம்.பி இடைத்தேர்தலில் போட்டியின்றி வென்ற அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதுடன், கால்நடை, மீன்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை உள்ளிட்ட இலாக்களுக்கு இணை அமைச்சராக உள்ளார்.
அவரது மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது.
நீலகிரி மக்களவை தொகுதியை குறி வைத்து பல்வேறு சுற்றுப்பயணங்களை எல்.முருகன் மேற்கொண்டு வந்தார். நீலகிரி மக்களை சந்திப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்ததுடன், பாஜக குறிவைத்து வேலை செய்து வரும் 10 தொகுதிகளில் ஒன்றாக நீலகிரி மக்களவை தொகுதி இருந்து வந்தது.
இந்த நிலையில், வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 57 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமாக உள்ள எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ஜியசபா எம்.பி பதவிக்கு போட்டியிடுவார் என பாஜக தேசியத் தலைமை அறிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு எம்.பி பதவியில் அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மக்களவைத்தொகுதியில் நேரடியாக களம் எல்.முருகன் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தமிழ்நாடு பாஜகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பிரதமர் மோடியால் தமிழ் மண்ணுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு பிரதிநிதிகள் தர வேண்டும் என்பதற்காக தமிழரான என்னை ராஜ்ஜியசபா உறுப்பினரகவும், அமைச்சராகவும் மோடி அவர்கள் ஆக்கினார்.
பயந்துவிட்டதா பாஜக என்ற கேள்விக்கு திமுகவை தூக்கி எரியும் கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது மட்டுமின்றி பாராளுன்றத் தேர்தலில் நுழையாமல் தடுப்பதுதான் எங்கள் வேலையாக உள்ளது.
நாளைகே கட்சி கூறினால் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிடுவேன். 2 ஆண்டுகளாக நீலகிரியில் தேர்தல் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். அங்கு மக்கள் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது, நீலகிரியில் பாஜக வேட்பாளர் யார் நின்றாலும் ஆ.ராசாவை ஓட ஓட விரட்டுவோம் என கூறினார்.