TVK Vijay: திமுக அரசுக்கு எதிராக 3 பக்க கடிதம்! ஆளுநரிடம் பற்ற வைத்த விஜய்! நடந்தது என்ன?
Updated Dec 30, 2024 03:42 PM IST

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் 3 பக்க மனுவை விஜய் அளித்துள்ளார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சந்தித்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். 15 நிமிடம் வரை இந்த சந்திப்பு நீடித்தது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே வந்த விஜய், செய்தியாளர்களை நோக்கி கை அசைத்த பின்னர் புறப்பட்டு சென்றார்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் மேதகு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.