Afternoon Top 10 News: ‘வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் ராமதாஸின் கண்டனம் வரை!’ பிற்பகல் டாப் 10 செய்திகள் இதோ!
Aug 07, 2024, 02:37 PM IST
Afternoon Top 10 News: ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம், பிரதமர் மோடி ஆறுதல், கலைஞர் கருணாநிதி நினைவு தினம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம் உள்ளிட்ட செய்திகள் இதோ!
Afternoon Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம்
பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகத்திற்கு மோடி ஆறுதல்
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து உள்ளதுடன், அவருக்கு ஆறுதலையும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைதத்தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக வேரூன்றி இருக்கிறோம்.” என கூறி உள்ளார்.
ஒலிம்பிக் சங்கத்துடன் மோடி பேச்சு
வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டு அறிந்து உள்ளார்.
வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வினேஷ் போகத் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகனும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தமன் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவுநாள்
தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு - அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்! ஆறாத வடுவென - ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு! இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் - அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக கொண்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.
2 அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார். வரும் செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, தினசரி அடிப்படையில் விசாரித்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
தங்கம் விலை சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 7) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.50,640க்கும் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 87-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 87,000க்கும் விற்கப்படுகிறது.
மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு இளநிலைப் பொறியாளர்கள் 49 பேர், இளநிலை வரைவு அலுவலர்கள் 49 பேர் என மொத்தம் 98 பேர் போட்டித்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு 120 நாட்களுக்கு மேலாகியும் அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் பல வகையான ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுத் தரப்பில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம்
வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று சென்னை அதிமுக தலைமை அலுவகக்த்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
டாபிக்ஸ்