'மன்னிப்பு கேட்டாலும் இர்ஃபானை விடமாட்டார்கள்'-சுகாதார அமைச்சர் அதிரடி, ‘டானா' புயல் அப்டேட்.. மேலும் செய்திகள்
Oct 22, 2024, 01:02 PM IST
தமிழ்நாடு முழுவதும் இன்று அக்டோபர் 22ம் தேதி காலை முதல் பிற்பகல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் இன்று அக்டோபர் 22ம் தேதி காலை முதல் பிற்பகல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
உக்கடம் பகுதியில் உள்ள சி.என்.ஜி. கியாஸ் பங்கில் வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் விரைந்துள்ளது. மேலும் முக்கியச் செய்திகளைப் பார்ப்போம்.
- "திமுக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து இதுவரை 17 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன" என அமுதம் மக்கள் அங்காடியில் 'அமுதம் பிளஸ்' தொகுப்பின் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள 26 பேர், சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி. முன்னதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்க இருப்பதாகவும் தெரிவிப்பு.
'மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது'
- “இர்ஃபான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது” என தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- மாமல்லபுரத்தில் நோ எண்ட்ரி வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.1499 க்கு 15 மளிகை பொருட்கள்
- தீபாவளியை ஒட்டி 15 மளிகை பொருட்கள் அடங்கிய ‘அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு, தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது! 15 பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை ரூ.1499.
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல். இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.
- நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் தேங்கிய மழை நீரில் கல்லூரி பேருந்துகள் சிக்கியது.
- மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. நாளை ‘டானா' புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகரும். வரும் 25ம் தேதி அதிகாலை தீவிர புயலாக மாறி, ஒடிசா - மேற்குவங்கம் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளார்.
டாபிக்ஸ்