Annamalai Case: ’எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு!’ ஆளுநர் மாளிகை மறுப்பு!
May 13, 2024, 09:31 PM IST
”அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதாக வெளியான செய்திகளுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து உள்ளத”
அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதாக வெளியான செய்திகளுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து உள்ளது.
அண்ணாமலை மீது வழக்கு! ஆளுநர் மாளிகை விளக்கம்!
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் திரு கே.அண்ணாமலை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
திரு. கே.அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை, மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.
அண்ணாமலை மீதான வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விரும்பத்தகாத சில கருத்துக்கள் மேடையில் பேசப்பட்டதாகவும், அதன் பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்ததாகவும், அதன் பிறகு அறிஞர் அண்ணா அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும்” கூறி இருந்தார்.
திமுக அதிமுகவிடம் இருந்து எதிர்ப்பு
இந்த பேச்சுக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அப்போது பேசி இருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “1956இல் அண்ணா பேசியதாக சொல்கிறார். அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடுதான் மேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆடு மேய்க்கும் அண்ணாமலை ஐபிஎஸாக உயர்ந்ததற்கு அண்ணா, பெரியார் போட்ட பிச்சைதான் காரணம். அண்ணாமலை இப்படி பேசுவதை திருத்திக் கொள்ளாவிட்டால் தமிழ்நாடு மக்கள் ஆர்த்து எழுவர்ர்கள், அவர் எங்கு பணி செய்தாரோ அங்கு ஓடிப்போகும் நிலை மிக விரைவிலே அவருக்கு ஏற்படும்” என கூறி இருந்தார்.
டிடிவி தினகரன் கொடுத்த விளக்கம்
இது தொடர்பாக பேசி இருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அண்ணாமலை குறிப்பிடும் சம்பவம் 1957ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது. திமுக தேர்தலில் போட்டியிடுவதற்கான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அப்போது பெரியவர் பிடிஆர் அவர்கள் அண்ணாவை அழைத்ததன் பேரில் அங்கு சென்று அண்ணா பேசி உள்ளார். அண்ணா அங்கு வந்து நாத்திகம் பேசியதால் அடுத்தநாள் தேவர் ஐயா அதை கண்டித்து பேசி உள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் அண்ணா மன்னிப்பு கேட்கவில்லை.” என கூறி இருந்தார்.
பியூஷ் மானுஷ் நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஷ் மானுஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் இரு பிரிவினர் இடையே பதற்றம் உண்டாக்குவது, பொய்யான தகவல்களை மக்களிடம் சேர்ப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரி இருந்தார்.
அண்ணாமலை பேசிய வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களிடன் அடிப்படையில், அண்ணாமலை பேச்சு தமிழ்நாட்டில் தேவையில்லாத சமூகபதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பியூஷ் மானூஷ் கோரி இருந்தார்.