Ka.Namasivayam Memorial Day: ‘தமிழ் வித்வான்’ தேர்வை முதன் முதலாக அறிமுகப்படுத்திய கா.நமச்சிவாயம் நினைவு நாள்
Mar 13, 2024, 06:00 AM IST
Tamil Pandit Ka Namasivayam: பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார்.
பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் பிறந்த நாள் இன்று. தமிழகத்தின் சிறந்த புலவராகவும், தமிழறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்தவர்.
வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் நமச்சிவாய முதலியார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார்.
நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது வயதில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். 1906-ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்து ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார்.
தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார்.
நமச்சிவாயர் திருத்தணிகை முருகன் பக்தர். மாதந்தோறும் கிருத்திகையன்று திருத்தணிகை சென்று தணிகைவேலனை வழிபடும் வழக்கம் கொண்டவர்.
நமச்சிவாயரின் மூத்த மகன் தணிகைவேல் சென்னை மாநிலக் கல்லூரியில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலுவின் வகுப்புத் தோழர். ஒரே வகுப்பில் படித்தவர்.
தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிடைக்கவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார்.
பின்னர், ராயபுரத்தில் இருந்த "நார்த்விக்' மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு "சிங்கிலர்' கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் இராணி மேரிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார். 1917 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பண்டிதர் ஈ. வி. அனந்தராம ஐயர் இறந்ததை அடுத்து அவரது இடத்திற்கு நமச்சிவாய முதலியார் நியமிக்கப்பட்டு, 1920 முதல் 1934 வரை பணியாற்றினார்.
இவரது காலத்தில், ‘தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக்கழகத் தேர்வு இருந்து வந்தது. மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் இவர் பாடுபட்டார். மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில் ‘தமிழ்ச் சிற்றிலக்கணம்’ எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். ‘தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்